ப்ளாஷ்பேக்: ரஜினி படத்துக்கு டிக்கெட் விலை 1000 ரூபாய் உத்தரவிட்டதோ எம்ஜிஆர்… இது எப்போ நடந்தது?

rajni mgr
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் ஒன்றுக்கு எம்ஜிஆர் டிக்கெட் விலையை நிர்ணயித்துள்ளார். அதுவும் ரூ.1000. இது எப்போ நடந்தது? கேள்விப்படவே இல்லையே என்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.
சண்டைக்கலைஞர்களுக்கு எம்ஜிஆர் செய்த உதவி ஒன்று. இரண்டல்ல. சொல்லிக் கொண்டே போகலாம். ஒருமுறை எம்ஜிஆர் படத்தில் அவருக்காக டூப் போட்டு நடித்தவர் ஷாகுல் ஹமீது. அவர் வெறும் சண்டைக்கலைஞர் மட்டுமல்ல. சாகசங்கள் செய்வதிலும் சூராதி சூரர். அவர் எம்ஜிஆரின் 3 படங்களில் டூப் போடம் ஒப்பந்தம் ஆகி இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு வீடு ஒன்று வாங்க பணம் தேவைப்பட்டது.
அதே நேரம் எம்ஜிஆரின் படங்களுக்கான படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆனது. அந்தப் பணம் வரும் என்று நம்பி இருந்த அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த சூழலில் எம்ஜிஆரைப் பார்க்க வந்தார். அப்போது எம்ஜிஆரின் உதவியாளர் சபாபதியிடம் விவரத்தைச் சொல்ல அவரோ தலைவர் வரட்டும் சொல்கிறேன். கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார் என்றார்.
அதே போல எம்ஜிஆர் வந்ததும் நடந்த விவரத்தைக் கூறியுள்ளார் சபாபதி. உடனே ஷாகுல் ஹமீதை வரச்சொல்லி அவருக்கு 100 ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து அதில் பாதிக்கும் மேலாக எண்ணாமலேயே கொடுத்துள்ளார் எம்ஜிஆர். அதில் 6ஆயிரம் ரூபாய் இருந்ததாம். அவருக்குத் தேவையோ 3000 தான். மீதி உள்ள பணத்தை வைத்து அடகு வைத்த நகையையும் திருப்பியுள்ளார். அதன்பிறகு அவரும் அந்த வீட்டை வாங்கினாராம். இப்போது அதன் மதிப்பு கோடிக்கணக்கில் போகிறதாம். அது மட்டுமல் அல்லாமல் ரஜினிகாந்த் நடித்த காளி படம் பிரம்மாண்டமான பொருள்செலவில் எடுக்கப்பட்டது.
அப்போது கிளைமாக்ஸ் காட்சி படமானபோது ஏராளமான குதிரைகளும் அந்த சண்டைக்காட்சிக்காக வந்துள்ளது. சண்டைக்கலைஞர்கள் பலரும் நடிக்க, அந்தக் காட்சியில் நெருப்பு எரிவது போல படமாக்கப்பட வேண்டுமாம். ஆனால் அது நெருப்பு அதிகமாகப் பற்றி சண்டைக்கலைஞர்களும், குதிரைகளும் காயத்திற்குள்ளாயினர். இந்தத் தகவல் அறிந்ததும் அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் நேரடியாக மருத்துவமனை வந்து படக்குழுவினர், தயாரிப்பாளரைப் பார்த்துள்ளார்.
ஏன் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை என்று சத்தம் போட்டுள்ளார். அதன்பிறகு அந்த சண்டைக்கலைஞர்களின் காயத்தைப் போக்க மருந்து சிங்கப்பூரில் தான் உள்ளது என்று கேள்விப்பட்டுள்ளார். உடனே அங்குள்ள தனது கட்சியினரிடம் பேசி மருந்தை வரவழைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் எம்ஜிஆர்.
அது மட்டும் அல்லாமல் படம் ரிலீஸ் ஆகும் முன்னர் தயாரிப்பாளரைப் பார்த்து 'இந்தப் படத்துக்காக ஏகப்பட்ட செலவு செய்துள்ளீர்கள். அதை எப்படி ஈடுகட்டப் போகிறீர்கள்? சண்டைக்கலைஞர்களுக்கும் சிகிச்சை அளிக்க செலவாகி இருக்கும். என்ன செய்யப் போகிறீர்கள்?' என எம்ஜிஆர் கேட்டுள்ளார். அதற்கு நீங்க என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன் என்றாராம் தயாரிப்பாளர்.
உடனே அலங்கார் தியேட்டரில் பிரீமியர் ஷோ ஒன்று போடச் சொல்லுங்கள். அதை எனது கட்சி நிர்வாகிகள் பார்க்க வருவார்கள். அவர்களுக்கு ஒரு டிக்கெட்டின் விலையை 1000மாக நிர்ணயம் செய்யுங்கள் என்றாராம் எம்ஜிஆர். அப்போது கட்சியினருக்கு 1000 ரூபாய் பெரிய விஷயம் இல்லை. எம்ஜிஆரும் அப்போது சினிமாவில் இல்லை. என்றாலும் எம்ஜிஆர் சண்டைக்கலைஞர்களுக்காக அப்படி ஒரு உதவி செய்தது மகத்தான விஷயம்தான்.