எம்ஜிஆர் பார்த்த கடைசி படம்... வெளியான போது அவர் இல்லாதது தான் சோகம்!..
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கடைசியாக நடித்த படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர் இறப்பதற்கு முன் கடைசியாக பார்த்த படம் எது என்று தெரிய வாய்ப்பில்லை. வாங்க பார்க்கலாம்.
சாதிகளைக் களைவதற்காக பாரதிராஜாவின் கைவண்ணத்தில் உருவான அந்தப் படம் தான் வேதம்புதிது. புரட்சித்தமிழன் சத்யராஜின் முற்றிலும் மாறுபட்ட வேடம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமும் இதுதான்.
பாலுத்தேவராகவே சத்யராஜ் படத்தில் வாழ்ந்து இருப்பார். இதற்காக அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன. படத்தின் இன்னொரு பெரிய பிளஸ் பாயிண்ட் வசனம். பாலுங்கறது உங்க பேரு. தேவர் என்பது நீங்க வாங்கிய பட்டமா என கேட்கும் போது ரசிகன் படத்தை அண்ணாந்து பார்க்கிறான்.
அதே போல் படத்தில் வரும் பல்லக்கு தூக்கினவங்களுக்கு எல்லாம் கால் வலிக்காதா என்ற வசனமும் நச் சென்று இருக்கும். படப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவிற்கு சென்றது. ஒரு காட்சியைக் கூட அவர்கள் கட் பண்ணவில்லையாம். அதே நேரம் படத்தை வெளியிட முடியாது என்று சொல்லி விட்டார்களாம்.
பாரதிராஜாவும், படக்குழுவும் திகைத்து நின்றது. அப்போது முதல் அமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர். அவர் பாரதிராஜாவுக்கு போன் போட்டு, உங்கள் படத்தில் ஏதோ பிரச்சனையாமே என்று கேட்டாராம். அது மட்டும் இல்லாமல் உங்கள் படத்தைப் பார்க்க வேண்டும். உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்றும் அக்கறையோடு சொன்னாராம்.
ஏவிஎம் தியேட்டரில் சத்யராஜை தனது அருகில் அமர வைத்து படம் முழுவதையும் பார்த்தாராம் எம்ஜிஆர். படம் முடிந்ததும் அனைவருக்கும் தனது வீட்டில் விருந்து கொடுத்து படப்பிடிப்பு குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். சத்யராஜின் கையை முத்தமிட்டாராம். பாரதிராஜாவிடம் ரிலீஸ் தேதியை நீ அறிவித்து விடு. படம் ரிலீஸாகும் என்ற நம்பிக்கையைக் கொடுத்து இருக்கிறார்.
24.12.1987ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் காலமானார். அவர் மறைந்து 3 நாள்கள் கழித்து வேதம்புதிது படம் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தது.