கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதுவார்னு எனக்கு தெரியாதா?!.. தயாரிப்பாளரிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்!..
ஒரு திரைப்படத்தின் வெற்றி மற்றும் பாடல்களை கணிக்கும் திறமை எம்.ஜி.ஆருக்கு எப்போதும் இருந்தது. ஏனெனில் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. சிறந்த தொழில்நுட்ப கலைஞர் மற்றும் இயக்குனரும் கூட. எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து கண்ணதாசன் மட்டுமே பாடல்களை எழுதி வந்தார். ஆனால், அரசியல்ரீதியாக இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. எனவே, படகோட்டி படத்திற்கு பின் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு கண்ணதாசன் பாடல் எழுதவில்லை.
அப்போதுதான் கலங்கரை விளக்கம் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் எம்.ஜி.ஆர். இப்படத்தை தயாரித்தவர் ஜி.என்.வேலுமணி. எம்.ஜி.ஆருக்கு இசை ஞானம் அதிகம். மேலும், தனது படங்களின் வெற்றிக்கு பாடல்களுக்கு முக்கிய காரணம் உண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
இதையும் படிங்க: பாஸ்வேர்ட் சொன்ன எம்.ஜி.ஆர்!.. அள்ளிக்கொடுத்த ‘ஆளவந்தான்’!… கையிலெடுத்த ‘கோச்சடையான்’!
எனவே, அவரின் பட பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் தயாரிப்பாளர் எம்.ஜி.ஆரை சந்தித்து அந்த பாடலை போட்டு காட்டுவது வழக்கம். கலங்கரை விளக்கம் படத்தில் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலம் 2 பாடல்களை எழுதி இருந்தார். அதில் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் எம்.ஜி.ஆரிடம் போட்டு காட்டினார் ஜி.என்.வேலுமணி.
பாடலை கேட்டவுடன், ‘மீண்டும் பாடலை போடுங்கள்’ என்றார் எம்.ஜி.ஆர். இப்படி 3 முறை அந்த பாடலை கேட்டார் எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு ‘இந்த பாட்டு எழுதினது யாருன்னு சொன்னீங்க?’ என கேட்டார். ‘பஞ்சு அருணாச்சலம் எழுதினார்’ என வேலுமணி சொன்னதும் ‘இந்த பாடலை கண்ணதாசன் எழுதி இருக்கிறார். என்னிடம் ஏன் பொய் சொல்கிறீர்கள்?’ என எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார்.
‘இல்லை.. கண்ணதாசன் எழுதவில்லை.. எம்.எஸ்.வி டியூன் போட என் கண் முன்தான் பஞ்சு அருணாச்சலம் பாடல் வரிகளை எழுதினார்’ என வேலுமணி சொல்ல எம்.ஜி.ஆருக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ‘என்னிடம் ஏன் விளையாடுகிறீர்கள்?. கண்ணதாசனின் பாடல் வரிகள் பற்றி எனக்கு தெரியாதா?.. இதை தூக்கி மூலையில் வைத்துவிட்டு வேறு ஒருவரை வைத்து எழுதி பாடலை ஒலிப்பதிவு செய்ய சொல்லுங்கள்’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர். இந்த முறை அவர் சொன்னது கடுமையாக இருந்தது.
இதையும் படிங்க: ஒரு தக்காளி பழத்தால் சென்சாரில் சிக்கி தூக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…
இதற்கு மேல் பேசக்கூடாது என நினைத்த வேலுமணி அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த தகவலை வேலுமணி எம்.எஸ்.வியிடம் கூறினார். சில நாட்களில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது அந்த பாடலை எழுதியது பஞ்சு அருணாச்சலம்தான் என்பதை எடுத்து சொன்னார் எம்.எஸ்.வி. அதன்பின்னரே அதை நம்பினார் எம்.ஜி.ஆர். அதோடு, ‘பஞ்சு அருணாச்சலம் இவ்வளவு நன்றாக பாடல் எழுதுவாரா?. அவரை தொடர்ந்து எனது படங்களில் பயன்படுத்தலாம். நாளை அவரை அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வாங்க’ என வேலுமணியிடம் சொன்னார்.
ஆனால், கண்ணதாசனும், எம்.ஜி.ஆரும் விலகி இருக்கும் இந்த நேரத்தில் அவரது இடத்தை நாம் தட்டி பறிக்கக் கூடாது என நினைத்த பஞ்சு அருணாச்சலம் எம்.ஜி.ஆரை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். இந்த அருணாச்சலம்தான் பின்னாளில் இளையராஜாவை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். மேலும், வெற்றிகரமான கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளராக சினிமா உலகில் வலம் வந்தார். இப்போது இவரின் மகன் சுப்பு சினிமாவில் நடிகராக கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.