Connect with us

ஏழைகளின் எஜமான் எம்ஜிஆரின் நீங்கா நினைவுகள்..!

Cinema History

ஏழைகளின் எஜமான் எம்ஜிஆரின் நீங்கா நினைவுகள்..!

மக்கள் மத்தியில் ஒரு சிலர் தான் எப்போதும் நினைவில் நிற்பார்கள். அவர்கள் எதற்காக அந்த அளவில் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் கடந்து வந்த பாதை மற்றவர்களுக்கு வாழ்வில் ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

எளிமை, கண்ணியம், நேர்மை என சகல பண்புகளையும் தன்னகத்தேக் கொண்டவர். மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு என்றும் அமர்ந்திருப்பவர். ஏழைகளின் எஜமான். அவர் தான் எம்ஜிஆர். அவரது நீங்கா நினைவுகளில் ஒருசிலவற்றை இங்கு பார்ப்போம்.

MGR

தொடர்ந்து 10 ஆண்டுகள் மக்களின் முதல்வராக பணியாற்றி அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார். ஏழை எளியவர்களின் துயர் துடைக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அவற்றில் மறக்க முடியாதது பள்ளியில் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தது தான்.

எம்.ஜி.ராமச்சந்திரன் இளம் வயதில் குடும்ப வறுமை காரணமாக சாப்பாட்டிற்குக் கூட கஷ்டப்பட்டார். அரசியல் வாழ்க்கையில் இளமைப்பருவத்தில் சி.என்.அண்ணாத்துரையின் திராவிட முன்னேற்ற கழகத்தில் தான் பொருளாளராக இருந்துள்ளார். அப்போது கருணாநிதியும் அதே கட்சியில் தான் இருந்தார்.

கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் தனியாக வந்து 1972ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் மாபெரும் கட்சியைத் தொடங்கினார். சினிமாவைப் போல அரசியலிலும் வெற்றி வாகை சூடினார். ஜெயலலிதா இவரது கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் படுத்துக்கொண்டே தேர்தலில் வெற்றிபெற்று அரியணை ஏறியவரும் இவர்தான்.

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்களின் போதும் எளிமையைக் கடைபிடித்தார். போகும் பாதைகளில் ஏழைகள் வயதானவர்களைக் கண்டால் சாப்பாடு பார்சலையும், போர்வையையும் மறக்காமல் கொடுப்பார். தன்னை வந்து யார் பார்க்க வந்தாலும் அவர்களுக்கு வயிறாற சாப்பாடு கொடுப்பது தான் இவரது முதல் கடமையாக இருக்கும்.

தன்னைப் போலவே பிறரையும் நேசித்த பெருந்தகையாளர். தன் சினிமா படங்களில் அவர் நல்ல கருத்துக்களையே எப்போதும் சொல்வார். ஏழை எளியவர்களின் துயர் துடைக்கும் வகையில் தான் கதைக்களங்களையே தேர்வு செய்வார்.

தனது படங்களில் காவலர், மீனவர், துப்பறியும் நிபுணர், விவசாயி என எண்ணற்ற வேடங்களில் வந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தான் நடிக்கும் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் தருவார். பாடல்களில் தத்துவங்களும், கருத்துகளும் இடம்பெறும் வகையில் பார்த்துக் கொள்வார்.

அன்னமிட்ட கை நம்மை ஆக்கி விட்ட கை, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே… தன்னாலே வெளிவரும் தயங்காதே… தலைவன் இருக்கிறான் மயங்காதே, நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்… உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்…

Enga veettu pillai MGR

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…, திருடாதே பாப்பா திருடாதே, நாடு அதை நாடு….அதை நாடாவிட்டால் ஏது வீடு…? ஆகிய பாடல்களைக் கேட்டால் அதன்படி வாழ்ந்தால்…எப்பேர்ப்பட்ட கெட்டவர்களும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள். நம் வாழ்க்கையில் வரும் பல சிக்கல்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால், எம்ஜிஆர் படங்களைப் பார்த்தாலே போதும். நமக்கு ஒரு தெளிவு பிறந்து நம் சிக்கல்களுக்கான தீர்வும் கிடைத்து விடும்.

திரை உலக வாழ்க்கையில் அடிமைப்பெண், நாடோடிமன்னன், மன்னாதி மன்னன், அன்பே வா, படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோவில், விவசாயி, நாடோடி, அரச கட்டளை, கணவன், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், நம் நாடு, பல்லாண்டு வாழ்க, வேட்டைக்காரன், பணக்கார குடும்பம் என பல வெற்றிப்படங்களில் நடித்து மக்களின் ரசனைக்கு விருந்து படைத்தார்.

அவர் திரையில் வந்தாலே போதும். அவர் முகத்தைப் பார்த்தாலே போதும்…என்று எத்தனையோ ரசிகர்கள் இன்று வரை தவம் கிடக்கின்றனர். அப்படி ஒரு முகராசி எம்ஜிஆருக்கு மட்டுமே அமைந்தது என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று அவரது 34வது நினைவு நாள். இனி இப்படி ஒரு மனிதர் பிறப்பது அபூர்வம் தான்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top