ப்ளாஷ்பேக்: ஒரே ஆண்டில் 15 படங்களில் நடித்து அசத்திய மோகன்… இதுல எவ்ளோ ஹிட்டுன்னு பாருங்க..!

mic mohan
80களில் நடிகர்கள் ரொம்பவே உற்சாகமாக நடித்து வந்தனர். தமிழ் சினிமாவில் பொற்காலம் என்றே சொல்லலாம். ரஜினி, கமல் கோலூச்சிய அந்தக் காலகட்டத்திலும் மோகன் மைக்கைக் கையில் பிடித்தபடி உற்சாகமாக பாடி ஆடி அசத்தினார். அவர் படத்தில் பாடல் எல்லாமே சூப்பர்ஹிட்தான். அவருக்கு அப்படி ஒரு ராசி. மைக்கைக் கையில் எடுத்துப் பாடியே ஹிட் கொடுத்ததால் மைக் மோகன் ஆனார்.
இவரது சமகால நடிகர்கள்தான் சத்யராஜ், கார்த்திக், பிரபு, சுரேஷ், பாண்டியராஜன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர்னு பெரிய கூட்டமே இருந்தது. ஆனாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பெஸ்ட் என்றே சொல்லலாம். அனைவரும் தங்களுக்குரிய தனித்துவத்தைப் பெற்று இருந்தார்கள்.
அந்த வகையில் மோகனின் படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா கொண்டாடின. அதனால் அவரை 'வெள்ளிவிழா நாயகன்' என்றே அழைத்தனர். உதயகீதம், இளமைக் காலங்கள், பயணங்கள் முடிவதில்லை, விதி என்று பல படங்கள் அவருக்கு சூப்பர்ஹிட். குறிப்பாக தாய்மார்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் பீக்கில் இருந்த காலகட்டத்தில் ஒரே ஆண்டில் 15 படங்கள் நடித்து அசத்தியுள்ளார்.
1984ல் அவர் அப்படி நடித்த படங்களில் பெரும்பாலானவை சூப்பர்ஹிட். உன்னை நான் சந்தித்தேன், நான் பாடும் பாடல், நிரபராதி, விதி, ஓ மானே மானே, ஓசை, நூறாவது நாள், 24 மணி நேரம், அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடி வா, சாந்தி முகூர்த்தம், நெஞ்சத்தை அள்ளித்தா, மகுடி, ருசி, வாய்ப்பந்தல் ஆகியவை.
இவற்றில் நூறாவது நாள், 24 மணி நேரம், நான் பாடும் பாடல், விதி, நெஞ்சத்தை அள்ளித்தா, நிரபராதி, உன்னை நான் சந்தித்தேன், ருசி படங்கள் சூப்பர்ஹிட். இவற்றில் கே.விஜயன் இயக்கிய விதி திரைப்படம் 500 நாள்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. படத்தின் வசனம் சூப்பர்ஹிட். அதற்காகவே ஏராளமான ரசிகர்கள் படம் பார்க்க வந்தனர். அந்தக் காலகட்டத்தில் வெறும் வசனம் மட்டும் இந்தப் படத்திற்காக ஒலிச்சித்திரமாக பல இடங்களில் ஒலிபரப்பப்பட்டன.