ஆதி நடிப்பில் உருவாகியுள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கெடிகா ஷர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே அதன் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால், திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது.
திரையரங்குகளில் வெளியான பிறகு படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வசூல் குறித்த தகவல்களும் கவனம் பெற்றுள்ளன. படம் வெளியாகி தற்போது 5 நாட்கள் கடந்துள்ள நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாக்ஸ் ஆபீஸ் வசூலை கண்காணிக்கும் Sacnilk வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, மீசைய முறுக்கு 2 திரைப்படம் இந்திய அளவில் 5 நாட்களில் சுமார் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், செவ்வாய்க்கிழமை மட்டும் தமிழகத்தில் இப்படம் சுமார் ரூ.2.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவல் வேறுபட்டதாக உள்ளது. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திரைப்படம் ஏற்கனவே ரூ.50 கோடி வசூலை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், படக்குழு வெளியிடும் அதிகாரப்பூர்வ வசூல் எண்ணிக்கைக்கும், வெளிப்புற பாக்ஸ் ஆபீஸ் கண்காணிப்பு நிறுவனங்கள் வெளியிடும் மதிப்பீடுகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.




