latest news
Kanguva: சூர்யா என்ன பணத்தை சுருட்டிக்கிட்டி ஓடிட்டாரா?!.. பிரபல இயக்குனர் காட்டம்!…
Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 31ம் தேதி வெளியான திரைப்படம்தான் கங்குவா. இந்த படம் வெளியான அன்றே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. சூர்யாவின் மீது தனிப்பட்ட தாக்குதல்களாகவே பல விமர்சனங்கள் இருந்தன. சில குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களும், விஜய் ரசிகர்களும் கூட சூர்யாவை கடுமையாக விமர்சித்தனர்.
ஒருபக்கம், சூர்யா மீது இவ்வளவு கோபத்தையும், வன்மத்தையும் கொட்ட தேவையில்லை எனவும் பலரும் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில், நந்தன் பட இயக்குனர் இரா. சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: சிரிச்சே கவுத்துப்புட்டீயே சின்ராசு.. ‘கங்குவா’ படத்தில் சிறுத்தை சிவா பண்ண வேலையை பாருங்க
நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, சுரண்டல்களை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கடக்கிறோம்.
ஆட்சியில், நிர்வாகத்தில், அரசியல் நிலைப்பாடுகளில் நாம் க்யூவில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தவறு செய்கிற போது இத்தகைய ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறோமா? சினிமாவுக்கு எதிராக இவ்வளவு சீறுகிற நாம், நம் பகுதியின் கவுன்சிலரிடம் என்றைக்காவது முறையிட்டிருப்போமா?
உயிர்க் காக்கும் மருத்துவத்தில் நடக்கிற கொடுவினைகளைக்கூடச் சகித்துக் கொள்கிறோம். இந்த ஆவேசமும் கொந்தளிப்பும் அங்கெல்லாம் எப்படி அமைதியாகிறது? ஒரு படம் நம்மை ஏமாற்றுகிற போது பாய்கிற நாம், ஒரு நிஜம் நம்மை ஏமாற்றுகிற போது சகிக்கவும், தாங்கவும் எப்படி பழகிக் கொள்கிறோம்?
சமூக நீதிக்காக, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனிதர்களை எத்தனை ஊடகங்கள் காட்டுகின்றன? எத்தனையோ அநீதிகளை நெருக்கடிகளை மென்று செரிக்கிறோம். ஆனால், சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுகிறோம். “படத்தில் ஏன் இவ்வளவு வன்முறைக் காட்சிகள்” என ஆவேசப்படுகிற நாம், நம் கண் முன்னே நடக்கிற கத்திக் குத்துகளைக் கண்டுகொள்ள மாட்டோம்.
படத்தில் எதுவும் தவறான காட்சிகள் வந்துவிடக் கூடாது. நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது என்ன மனநிலை? சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை. இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம்.
சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம். 3மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில சண்டைகளில் என்ன ஏதென்றே தெரியாமல் போவோர் வருவோரும் சேர்ந்து அடிப்பதுபோல், பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள். உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி.
நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல…’ என பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: நெகட்டிவிட்டிய சொன்னாதான் ரீச் ஆகுது?!.. கங்குவா படம் குறித்து நடிகர் சூரி சொன்ன விமர்சனம்!…