இப்ப என்ன பெரிசா பர்ஸ்ட்லுக், போஸ்டர்னு... அப்போ பாக்கியராஜ்கிட்ட இருந்த தில்லு யாருக்காவது இருக்கா?
தமிழ்சினிமா உலகில் திரைக்கதை மன்னன் என்று கெத்தாகப் பவனி வந்தவர் கே.பாக்கியராஜ். இவரது கைவண்ணத்தில் உருவான படங்கள் எல்லாமே சக்கை போடு போட்டன. இருபால் ரசிகர்களையும் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வரவழைத்தன.
காமெடி, கிளாமர், காதல், கிராமியம் என எல்லாவற்றையும் கரெக்டான மிக்சிங்கில் கொடுத்து இருப்பார். அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் முந்தானை முடிச்சு, மௌனகீதம் படங்களை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.
மௌனகீதங்கள் படத்தின் கதை நச்சென்று இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையை மிக அழகாக சொன்ன படம். பாக்கியராஜைக் காதலித்து கரம்பிடிக்கிறார் சரிதா. ஆனால் பாக்கியராஜிக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு என நினைத்து அவரை பிரிந்து விடுகிறார். ஆனால் கடைசியில் இருவரும் என்ன ஆனார்கள்? பிரச்சனை முடிவுக்கு வந்ததா? ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் கதை.
'மூக்குத்தி பூ மேலே காற்று உட்கார்ந்து வீசுதடி' என்ற அற்புதமான பாடல் இந்தப் படத்தில் தான் உள்ளது. மகிழ்ச்சி, சோகம் என கலந்து வந்து நம்மை அசத்தியது. படத்துக்கு இசை அமைத்தவர் கங்கை அமரன். அதே போல ஜானகி பேபி வாய்ஸில் பாடிய டாடி டாடி பாடலும் அந்தக் காலத்தில் ஒலிக்காத ரேடியோ நிலையங்களே இல்லை எனலாம்.
இப்போ என்ன பர்ஸ்ட்லுக், டீசர், போஸ்டர்னு எல்லாரும் படம் வருவதற்குள் அப்படி இப்படின்னு சீன் தான் போடுறாங்க. ஆனா படம் வந்தா புஸ்சுன்னு போயிடுது. இதுக்குத் தானா இவ்ளோ பில்டப்புன்னு எல்லாரும் கேட்குறாங்க. அந்த வகையில் பார்க்கப் போனா பாக்கியராஜ் அப்பவே கெத்து காட்டியிருக்கிறார்.
மௌனகீதங்கள் படம் உருவாகிக் கொண்டு இருக்கும்போதே குமுதம் இதழில் படத்தின் கதையை வெளியிட்டுள்ளார். அப்படின்னா பாக்கியராஜிக்கும் சரி. படத்தின் தயாரிப்பாளர் கோபிநாதனுக்கும் சரி. எவ்வளவு தைரியம் இருந்து இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
அப்படி வெளியிட்டும் படம் வெள்ளி விழா கண்டது தான் ஆச்சரியம். காரணம் வலுவான கதை தான். திரைக்கதையும் மாஸாக இருந்ததால் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது என்றே சொல்ல வேண்டும்.