சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து… எம்ஜிஆருக்குப் பொருத்தமான வரிதான்… அதான் அப்படி செய்தாரா?

mgr
MGR: 'சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ. தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ'ன்னு ஒரு பாடலில் வரிகள் வரும். அதன் முதல் வரி 'திருடாதே பாப்பா திருடாதே' என்பதுதான். இது எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் தத்துவப்பாடல்களில் ஒன்று. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் திருடாதே. இந்தப் பாடலில் மேலே சொன்ன வரிகளுக்கு ஏற்ப எம்ஜிஆரின் வாழ்வில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. என்னன்னு பாருங்க.
50களின் இறுதியில் ஒடிசாவில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒரு திரைப்படத்தை திரையிட்டு அதன் வசூலை ஒடிசாவுக்குக் கொடுக்கலாம்னு முடிவு செஞ்சாங்க. திரைப்படத்தைத் திரையிட்டா மட்டும் போதுமா? அதுக்கு முக்கியமான பிரமுகர் இருந்தால் தானே வசூல் அதிகரிக்கும்.
அதனால் அந்த விழாவுக்கு எம்ஜிஆரை அழைப்பதுன்னு முடிவு செய்தனர். அதனால் அப்போது பத்திரிகை ஆசிரியராக இருந்த சாரதியை அணுகினர். அவர் பேசும்படம் என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். அவரிடம் மாணவர்கள் பேசியதைத் தொடர்ந்து எம்ஜிஆரிடம் சென்றார். கல்லூரி மாணவர்கள் கிஷோர்குமார், வைஜெயந்திமாலா நடித்த நியூடெல்லி என்ற படத்தைத் திரையிடுறாங்க. அதுக்கு நீங்க வந்தா நல்ல வசூல் இருக்கும்.
அந்த நிதியை ஒடிசாவுக்கு அனுப்பலாம்னு இருக்காங்கன்னு சொன்னார். நல்ல காரியம்தானே. நிச்சயம் நான் வருகிறேன்னு எம்ஜிஆர் சொன்னாராம். அந்தப் படத்துக்கான திரையிடும் நாள் நெருங்கியது. அப்போதுதான் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் அந்தப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றது எம்ஜிஆருக்குத் தெரியவந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையானது.
அப்போது சாரதி அங்கு வந்தார். இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்ற படத்துக்கு நீங்க என்னை அழைக்கலாமான்னு எம்ஜிஆர் கேட்டாராம். அதே நேரம் அந்த மாணவர்கள் நிரபராதிகள். அவங்களுக்கு இப்படி ஒரு காட்சி படத்துல இருக்குன்னே தெரியாம இருக்கலாம். அதனால நான் ஒப்புக்கொண்டபடி 'அந்த விழாவுக்கு வர்றேன். ஆனா என்னோட கருத்தை அங்கு பதிவு செய்வேன்'னு எம்ஜிஆர் ஸ்ட்ரிக்டா சொல்றாரு. அதுக்கு 'நீங்க வந்தாலே போதும்'னு கும்பிடு போட்டு வந்து விடுகிறார் சாரதி.

விழாவில் எம்ஜிஆர் 'திரைப்படங்கள் என்பது ஒற்றுமையை வளர்க்குற விதத்தில் இருக்கணும். வேற்றுமையை உண்டாக்கக்கூடாது. அதே மாதிரி மற்றவர்கள் மனதைப் புண்படுத்துற மாதிரியான காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடமை' என்று பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் வந்ததால் நல்ல வசூல். அந்த தியேட்டரை விட்டுக் கிளம்பியதும் என்னை வந்து சந்திங்கன்னு விழா நிர்வாகியிடம் சொன்னார் எம்ஜிஆர்.
மறுநாள் விழா நிர்வாகிகள், சாரதியையும் அழைத்தபடி எம்ஜிஆரை சந்திக்கச் சென்றனர். உங்க முயற்சி நல்ல முயற்சி. ஆனா படத்தைத் தான் தப்பா தேர்ந்தெடுத்துட்டீங்க. அதுக்கு உங்களை குறை சொல்ல முடியாது. உங்க நல்ல பணிக்கு என் சிறுதொகையைக் காணிக்கையாகக் கொடுக்க விரும்புறேன்னு பெரிய தொகையைக் கொடுத்தாராம்.
அப்போது சாரதி 'இந்தத் தொகையை விழா நடக்கும்போதே கொடுத்திருக்கலாமே. இது பெரிய அளவில் பத்திரிகை செய்தியாக வந்திருக்குமே'ன்னு சொன்னாராம். 'அந்தத் தொகையை நான் கொடுக்காததுக்குக் காரணமே இதுதான். நான் கொடுத்துருந்தா இதுதான் பெரிய செய்தியாகி இருக்கும். ஆனா நான் படத்தைப் பற்றிப் பேசுன கன்டன்ட் வந்துருக்காது. அந்தச் செய்தி வர்றதுதான் முக்கியம்னு நினைச்சேன். அதான் விழா நடந்தபோது இந்தத் தொகையைக் கொடுக்கல'ன்னு சொன்னாராம் எம்ஜிஆர். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் எம்ஜிஆர் எந்த அளவு சிந்தித்து செயல்பட்டார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.