Connect with us

Cinema History

வாசமில்லா மலரிது!..வசந்தத்தை தேடுது!.. தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த படம் இதுதான்!..

இது இளையராஜா இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு இசை காவியம். இளையராஜா இல்லாமலும் ஒரு படத்தை வெற்றிப்படமாக எடுக்க முடியும் என்று அந்தக் காலகட்டத்தில் நிரூபித்த ஒரே பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் தான். அதுமட்டுமல்லாமல் கஷ்டங்களை கூட கண்ணியமாக அதே நேரத்தில் காவியமாக எடுக்க முடியும் என்று நிரூபித்த படம் ஒரு தலை ராகம்.

சோகங்களை கூட காவியமாக காட்டியது இந்தப் படம். அதாவது சோகத்தைக் கூட சுகமாக மாற்றுவது தான் கலை. அதை நிரூபிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம் தான் இந்த ஒரு தலை ராகம்.

வறுமையிலும், காதலிலும் வக்கிரங்களைத் துளி கூட கலக்காமல் படம் எடுக்க முடியும் என்று நிரூபித்துள்ளார் ராஜேந்தர். அந்த காலகட்டத்தில் சாதாரண திரையரங்குகளில் வெளிவந்து, ஒரு ரூபாய் கட்டணத்தில், ஒரு கோடி இன்பம் கொடுத்தது இந்தப் படம்.

Oru thalai ragam 3

தாடி வைப்பது இப்போது இளைஞர்கள். கல்யாண ரிசப்ஷனில் பேஷன் போல் செய்கிறார்கள். ஆனால் அப்போது ஆண்கள் தாடி வைத்தால், புரோகிதரே கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார்.

ஆனால் தற்போது இளைஞர்கள் சந்தோஷத்தில் கூட தாடி வைத்துக் கொள்வது ஃபேஷனாகி விட்டது. ஆனால் அந்தக் காலத்தில், இளைஞர்களின் தாடி என்பது காதலின் சோகம் என்பதற்கு மட்டுமே அடையாளமாக இருந்தது. அழகு தமிழில் காதலை இருவரும் பரிமாறிக் கொள்வதே அழகு.

ஆனால் கலாச்சாரம் பற்றிய தவறான புரிதல்களாகவே இப்போதெல்லாம் பல படங்கள் வந்த வண்ணம் உள்ளன. தாடி வைத்த பையனைத் தான் பெண் விரும்புகிறாள். பைக்கில் ஜாலியாக அவனுடன் ஜீன்ஸ் பேண்ட் போட்டு சுற்றுகிறாள். அப்போது ஒரு பெண்ணின் திருமணத்தை, 90 சதவீதம், அப்பா தான் முடிவு செய்வார். அப்போது அதிகளவில் வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடியது.

காதல் எங்காவது ஒரு சில இடங்களில் மட்டுமே இருந்தது. ஒரு காட்சி ஒன்றில் டி.ராஜேந்தர் வருவார். எல்லோரும் ஹீரோ ஷங்கரை பாடச் சொல்வார்கள். அதற்கு முன்பு மேடையில் ஒரு, வற்றிப்போன தாடிக்கார இளைஞன் ஹிந்தி பாடல் பாட கொண்டிருப்பான்.

திறமை இருந்தா வாங்கடா…வந்து பாடி ஜெயிங்களே… என்று ஒரே டயலாக். அவர் வாழ்க்கையே அந்த ஒரு டயலாக்கில் அடங்கி விட்டது என்றே சொல்லலாம். அவர் வாழ்க்கையில் வெற்றி மட்டும் கொடுக்கவில்லை ஒரு தலை ராகம், அவர் மனைவி உஷா அந்த படத்தில் தான் தோன்றினார்.

படத்தின் கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். வேலையில்லா திண்டாட்டம், போன்ற நெகடிவ் விஷயங்களைத் தொடவில்லை. கல்லூரி படிப்பில், அப்பொழுது டி.ராஜேந்தர் குரூப் டான்ஸ் கொண்டு வரவில்லை. முதல் பாடல், மீனா ரீனா ராதா வேதா, நம்ம பார்வதி வராடா.. பாட ஆள் கிடைக்காமல், ஜாலி ஆபிரகாம் என்ற பாடகர் பாடியுள்ளார்.

Oru thalai Ragam

அதற்குப் பிறகு தோன்றிய ராதா, நடிகை மீனா, நடிகை நளினி, ஏன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பெயர் கூட இருக்கும். அந்தப் பாடலில் தான் நாயகி ரூபா அறிமுகம் ஆகிறாள்.

தமிழ் கலாச்சாரப்படி புடவை கட்டிக்கொண்டு, அன்று நடிகை ரூபா படம் முழுவதும் வருவது தாய்மார்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இது ஒரு தலை ராகம் டிசைன் என்று ஜவுளிக்கடைகளில் ஏராளமான புடவைகள் விற்றுத் தீர்ந்தன.

அந்த அளவு இந்தப் படம் தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சாதனைகளை சத்தமில்லாமல் அரங்கேற்றியவர் டி.ராஜேந்தர் என்ற மகா கலைஞன் என்றால் மிகையில்லை.

கதையில் நாயகி பேசவே மாட்டார். நாயகன் அழகானவன் பணக்காரன், நன்றாக பாடுவான், பாகவதர் என்று கிண்டல் அடிப்பார்கள் நண்பர்கள். ஆனால் கடைசிவரை கதாநாயகி, எதற்காக தனக்குள்ள அப்படி ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு, ஹீரோவை வெறுக்கிறார் என்று புரியவில்லை.

அம்மாவின் கேரக்டரை தப்பாக பேசினால், பெண் காதலிக்க கூடாதா? என்ன பிற்போக்குத்தனமான சிந்தனை.இரண்டாவது பாடல் கூடையிலே கருவாடு, அன்றைய காலகட்டத்தில் மாயவரம் மீட்டர் கேஜ் ஸ்டேஷன் எப்படி இருந்தது என்று இந்தப் பாடலில் பார்க்கலாம்.

இடையில் ஒரு காட்சியில் நாயகன் சொல்வான், நான் ஊருக்கு போறேன். ரூபா, வாடி போகலாம். அப்போது ரூபாவின் தோழியாக வரும் உஷா, நீங்க கடைசியா சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு செல்வார். ஆபாசம் துளி கூட இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரே தமிழ் வெற்றி படம். பெண்களை தவறாக காட்டாமல் படம் ஓடாது என்ற கருத்தாக்கத்தை உடைத்து எறிந்தவர் தான் இயக்குனர் டி.ராஜேந்தர்.

வாசமில்லா மலரிது பாடல் எஸ்.பி.பி யின் குரலில் மணம் கமழும். ஜெயச்சந்திரன் பாடும் கடவுள் வாழும் கோவிலிலே, கற்பூர தீபம்.. என்ற பாடலும் செமயாக இருக்கும். நான் ஒரு ராசி இல்லா ராஜா, ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள் ஆகிய பாடல்கள் சோகத்திலும் ரசனை ததும்பி இழையோடியபடி இருக்கும். நான் ஒரு ராசியில்லா ராஜா பாடலை டிஎம்எஸ் பாடி அசத்தியிருந்தார்.

இது குழந்தை பாடும் தாலாட்டு என்ற பாடல் அவ்வளவு அற்புதமானது. வழக்கமாக இளையராஜாவும், வைரமுத்துவும் சேர்ந்தால் தான் இப்படி ஒரு சூப்பர்ஹிட் பாடலைக் கொடுக்க முடியும். ஆனால் தன்னாலும் முடியும் என்று நிரூபித்தார் டி.ராஜேந்தர்.

கல்லூரிக்கு செல்லும் பெண்கள் அந்த காலத்தில் எப்படி இருப்பார்கள் என்று யாராவது பார்க்க விரும்பினால், ஒரு தலை ராகம் திரைப்படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். பெண்கள் புடவை கட்டுவது தான் அழகு என்று நாமே சொல்லிவிடுவோம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top