கடந்த பல வருடங்களாகவே ஒரு பெரிய படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும்போது அந்த படத்தின் கதை என்னுடையது என ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவேண்டியிருக்கும். இரண்டு கதைகளும் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தால் வழக்கு தொடர்ந்தவருக்கு பணம் கொடுத்தும் பிரச்சனையை முடித்துவிடுவார்கள்.
தற்போது இந்த பிரச்சனையில் பராசக்தி படம் சிக்கியிருக்கிறது. ஆகாஷ் பாஷ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கி சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் 1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. படத்தில் வரும் சில காட்சிகளுக்கு தணிக்கை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்க ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளனர். ஏனெனில், 2026 ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில்தான் திரையுலகில் இணை இயக்குனராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவர் எனது சொம்மொழி குறும்படத்தின் கதையை பராசக்தி என்கிற பெயரில் படமாக எடுத்துள்ளனர் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், செம்மொழி மற்றும் பராசக்தி இரண்டின் கதையையும் ஒப்பிட்டு பார்க்கும்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு உத்தரவிடவேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று இதுபற்றி ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் ஜனவரி 2ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். விரைவில் இரண்டு கதைகளையும் ஒன்றா என திரைப்பட எழுத்தாளர் சங்கம் விசாரிக்கும் எனத்தெரிகிறது.
