இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வந்தது இல்ல! – இரண்டாம் பாகம் தயார், பார்த்திபனின் அடுத்த படம்..
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து படமாக்கி வருபவர் இயக்குனர் பார்த்திபன். முன்பு அவர் இயக்கிய குடைக்குள் மழை போன்ற திரைப்படங்கள் இப்போது சினிமா கற்கும் இளைஞர்களுக்கு பிடித்த படங்களாக உள்ளன.
இயக்குனராக இதுவரை 16 திரைப்படங்களை இயக்கியுள்ளார் பார்த்திபன். இந்த திரைப்படங்களில் பல தனித்துவமானவையாக உள்ளன. போன வருடம் அவரது இயக்கத்தில் இரவின் நிழல் என்கிற திரைப்படம் வெளியானது இந்த திரைப்படம் உலக அளவில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறப்படுகிறது.
அதே போல மொத்த திரைப்படத்தையும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து படமாக்குகிறேன் என அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம் ஒத்த செருப்பு. அதில் மொத்த படத்திலும் கதாபாத்திரமாக பார்த்திபன் மட்டுமே இருப்பார். இந்த நிலையில் அடுத்த படமும் கூட பார்த்திபன் வித்தியாசமான பாணியில் பண்ண போகிறார் என கூறப்படுகிறது.
1989 இல் பார்த்திபன் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் புதிய பாதை. இந்த படத்தை மறுபடியும் இயக்க இருக்கிறார் பார்த்திபன். இதுக்குறித்து பார்த்திபன் கூறும்போது “பொதுவாக ஒரு படத்தை மறுபடி எடுக்கும்போது அதில் நடித்த அதே நடிகர் மறுபடியும் நடிக்க மாட்டார்.
உதாரணமாக கூற வேண்டும் என்றால் முதலில் பில்லா படத்தில் ரஜினி நடித்தார். அதே படத்தை மறுபடி எடுத்தபோது அதில் ரஜினிக்கு பதில் அஜித் நடித்தார். ஆனால் நான் இயக்கும் புதிய பாதை படத்தின் மறு உருவாக்கத்திலும் நானேதான் கதாநாயகனாக நடிக்க போகிறேன். இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இப்படி நடந்ததில்லை” என கூறியுள்ளார் பார்த்திபன்.
விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என பார்த்திபன் கூறியுள்ளார்.