பாசமலர் படத்துக்கு வசனம் எங்கே உருவானதுன்னு தெரியுமா? அட இது எந்த லிஸ்ட்லயும் இல்லையே!

pasamalar
ஒரு காலகட்டத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரைப்படங்களுக்கும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் திரைப்படங்களுக்கும் மாறி மாறி வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். பாசமலர் தான் சிவாஜிக்கு முதன்முறையாக ஆரூர்தாஸ் வசனம் எழுதிய படம். அந்தப் படத்துக்குக் கதை எழுதியவர் கொட்டாரக் காதர். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான எம்.ஆர்.சந்தானமும், மோகன்தாஸ் மோகனும் தான் கதை எழுத ஆரூர்தாஸை ஒப்பந்தம் செய்தனர்.
அவர்கள் 'வசனம் எழுத எங்கே ரூம் போடணும்?'னு ஆரூர்தாஸைக் கேட்டனர். ஆரூர்தாஸைப் பொருத்தவரை அவர் மிகப்பெரிய இயற்கை பிரியர். பெசண்ட் நகர் கடற்கரை அவருக்குப் பிடித்த இடம். பல நாள்கள் அங்கு போய் நேரம் போவதே தெரியாமல் கடல் அலையைப் பார்த்தபடி அவர் உட்கார்ந்த நாள்கள் எல்லாம் உண்டு.
அந்தக் காலகட்டத்தில் கடற்கரை ஓரம் பல குடிசைகள் போட்டுருப்பாங்க. அந்த குடிசையில உட்கார்ந்து அந்தப் படத்துக்கு வசனம் எழுதினா எப்படி இருக்கும்னு யோசித்தார் ஆரூர்தாஸ். அதனால் தயாரிப்பாளர்களிடம் 'எனக்கு எந்த ஓட்டலிலும் ரூம் போட வேண்டாம். இந்தக் கடற்கரையில் ஒரு குடிசையை மட்டும் வாடகைக்குப் பிடித்துக் கொடுங்கள். அது போதும். வசனத்தை எழுதி முடித்து விடுகிறேன்'னு சொன்னாராம்.
அவர் அப்படி சொன்னதும் அந்தத் தயாரிப்பாளர்களுக்கு ஒரே ஆச்சரியம். 'சாதாரணமாக ஒரு படத்துக்கு வசனம் எழுத ஸ்டார் ஓட்டல்ல ரூம் வேணும்னு சொல்வாங்க. இல்லன்னா ஊட்டி, கொடைக்கானல்ல ரூம் போடச் சொல்வாங்க. நீங்க என்னன்னா ஒரு குடிசை போதும்னு சொல்றீங்களே…?'ன்னு சிரித்தபடி கேட்டார்கள்.

அப்போதும் இந்தக் குடிசையை மட்டும் எனக்குப் போட்டுக் கொடுங்க போதும். ஒரு வாரத்துல எழுதித்தாரேன்னு சொல்லி இருக்கிறார் ஆரூர்தாஸ். உடனே தயாரிப்பாளரின் உதவியாளரான முகிலனை அழைத்து அங்கு ஒரு குடிசைக்கு ஏற்பாடு செய்தார். அது ஆரூர்தாஸூக்கு ரொம்பவே பிடித்துப் போனது. உடனே அந்தக் குடிசையில் அமர்ந்து ஒரே வாரத்தில் படத்திற்கான வசனத்தை சொன்ன மாதிரி எழுதி முடித்து விட்டார்.
பாசமலரைப் பொருத்த வரை சிவாஜி, சாவித்திரி, ஜெமினிகணேசன் நடிப்பு எந்தளவுக்குப் பேசப்பட்டதோ அதே போல ஆரூர்தாஸின் வசனமும் பேசப்பட்டது. அப்பேர்ப்பட்ட வசனம் எல்லாம் உருவானது அந்தக் குடிசையில் தான் என்றால் ஆச்சரியமான விஷயமாகவே உள்ளது.
1961ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, சாவித்திரி, ஜெமினிகணேசன், நம்பியார், தங்கவேலு உள்பட பலர் நடித்த படம் பாசமலர். இது அண்ணன் தங்கை பாசத்திற்கு இன்று வரை எடுத்துக்காட்டாக உள்ளது.