கண்ணதாசன் காரை தினமும் நிறுத்திய போலீஸ் அதிகாரி!.. விஷயம் வேற லெவல்!…

by சிவா |   ( Updated:2023-04-12 06:08:58  )
kannadasan
X

kannadasan

திரையுலகில் பல ஆயிரம் பாடல்களை எழுதிவர் கவிஞர் கண்ணதாசன். காதல், பக்தி, சோகம், அழுகை, தத்துவம், விரக்தி, புலம்பல், நம்பிக்கை, ஏமாற்றம், உற்சாகம் என எந்த மாதிரியான சூழ்நிலை என்றாலும் அதற்கு தகுந்த வரிகளை எழுதி அசத்திவிடுபவர். எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமல்லாமல் ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் இவர் பாடல் எழுதியுள்ளார். அதேபோல், ரஜினி, கமல் ஆகியோருக்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார். மூன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற ‘கண்ணே கலைமானே’ பாடல்தான் கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல்.

சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா பாடல்கள் மட்டுமின்றி பல கவிதை தொகுப்புகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். அதேபோல், ஆன்மீக புத்தகங்கள், தன்னை பற்றிய சுயசரிதையை புத்தகங்களாகவும் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

அந்த காலத்தில் நடிகர்களுக்கு இருந்தது போலவே கண்ணதாசனுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். கண்ணதாசன் சென்னை தி.நகரில் வசித்து வந்தார். ஆழ்வார்பேட்டையில் இருந்த கவிதா ஹோட்டலில் அவருக்கு ஒரு அறை இருந்தது. பாடல்களை எழுதுவது, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சந்திப்பது ஆகிய விஷயங்களுக்கு கண்ணதாசன் அந்த அறையை பயன்படுத்தி வந்தார்.

அங்கு அவர் செல்லும்போது தினமும் ஆழ்வார்பேட்டை சிக்னலில் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் அவரின் காரை கை காட்டி நிறுத்துவாராம். இதைக்கண்ட கண்ணதாசன் டிரைவர்தான் ஏதோ தவறு செய்துவிட்டார் என நினைத்து ‘நிற்காதே செல்’ என சொல்வாராம். ஒருநாள் காரின் முன்னால் வந்து அந்த போலீஸ் அதிகாரி நின்றுவிட்டாராம். இதனால், பதறிப்போன கண்ணதாசன் அவரிடம் என்னவென விசாரித்துள்ளார். அந்த போலீஸ் அதிகாரி ‘நான் உங்கள் ரசிகன். உங்களை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், முடியவில்லை. இன்று பார்த்துவிட்டேன். நீங்கள் போகலாம்’ என சொல்லி அவருக்கு சல்யூட் வைத்து அனுப்பி வைத்தாராம்.

அந்த காவல்துறை அதிகாரியின் செயலை பார்த்து சிரித்து ரசித்தபடி அங்கிருந்து கவிஞர் புறப்பட்டு சென்றாராம்!..

Next Story