Connect with us

பொங்கல் ரிலீஸ் படங்கள் – ஒரு பார்வை

Cinema History

பொங்கல் ரிலீஸ் படங்கள் – ஒரு பார்வை

பொங்கலுக்கு பல படங்கள் வந்து ரசிகர்கள் விருந்து படைக்க உள்ளன. ஆனால் ஒரே ஒரு சிக்கல் உள்ளது. தற்போது வர உள்ள கொரோனாவின் லாக் டவுனால் படங்கள் வெளியாகும் சூழல் தள்ளிப்போனாலும் போகலாம். இப்போதே 50 சதவீத இருக்கைகளுக்கு தான் திரையரங்குகளில் அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஞாயிறு தொடர்ந்து முழு ஊரடங்கு என்றால் வலிமை போன்ற பெரிய படங்களின் ரிலீசும் கூட தள்ளிப்போனாலும் ஆச்சரியமில்லை. எது எப்படியோ பொங்கலன்றும் அதையொட்டியும் தொடர்ந்தும் வெளியாக உள்ள படங்களைப் பற்றி பார்ப்போம்.


அன்பறிவு

anbarivu Aathi

பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகிறது அன்பறிவு. இந்தப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேசி, நெப்போலியன், ஷிவானி, க்பை தீனா, ஆஷா ஷரத், விதார்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா தான் இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். அஸ்வின் ராம் இயக்கிய இந்தப்படத்திற்கான ட்ரெய்லரை வெளியிட்டு கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஆர்ஆர்

RRR Movie

பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாரான படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்.டி.ராமராவ், ராம்சரண், அஜய் தேவ்கன், அலியாபட், ஒலிவியா மோரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். இந்தபடத்தை தமிழில் லைக்கா நிறுவனம்; தயாரித்துள்ளது. இந்தப்படம் தமிழில் ரத்தம், ரணம், ரௌத்திரம் என்ற பெயரில் வெளியாகிறது. பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்தப்படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ராதே ஷ்யாம்

ராதே கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்பட பலர் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் நாயகன் பாகுபலி படத்தில் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு சிறு திரையரங்குகளில் தான் வெளியாகும். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

வலிமை

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜீத்குமாரின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்த பொங்கலுக்கு தல ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது. ஆக்ஷன் த்ரில்லர் படமான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப்படம் தான் பொங்கல் திரைப்படங்களில் முதலிடத்தைப் பிடித்து ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளது. இந்தப்படத்தில் நிஜத்தில் பைக்ரேசராக உள்ள அஜீத் படத்திலும் அதே போல வந்து சாகசங்கள் செய்து அசத்தியுள்ளார். குறிப்பாக ஒரு வீலை தூக்கியபடி மற்றொரு வீலில் பைக்கை ஓட்டி சாகசம் செய்வது நம்மை மயிர்கூச்செறிய செய்யும் ரேசிங் காட்சி. ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்பட பலரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இது ஹெச்.வினோத்துடன் அஜீத் இணையும் இரண்டாவது படம். முதல் படமாக இருவரும் இணைந்தது நேர்கொண்ட பார்வை படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நாய் சேகர்

கிஷோர் ராஜ்குமாரின் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் நாய் சேகர். இந்தப்படம் பொங்கலை அடுத்த ஜனவரி 17ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சதீஷ், பவித்ரா லெட்சுமி நடித்துள்ளனர். அஜேஷ் இசை அமைத்துள்ளார். இது ஒரு காமெடி படமாக தயாராகி உள்ளது. வடிவேலு நடித்த ஒரு படத்தில் இந்த நாய்சேகர் என்பது அவரது கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரமே வாகை சூடும்

து.பா.சரவணன் இயக்கிய இந்தப்படத்தை விஷால் பிலிம் பேக்டர் நிறுவனம் இயக்கி உள்ளது. விஷால் கிருஷ்ணா, டிம்பிள் ஹயாத்தி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப்படம் வரும் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழரசன்

பாபு யோகேஷ்வரன் இயக்கிய இந்தப்படத்தை எஸ்என்எஸ் மூவீஸ் நிறுவன எஸ்.கௌசல்யா ராணி தயாரித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜய் ஆண்டணி, சுரேஷ் கோபி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படமும் குடியரசு தினத்தன்று தான் வெளியாக உள்ளது.

ஐங்கரன்

ரவிஅரசு இயக்கத்தில் பி.கணேஷ் தயாரித்துள்ள இப்படம் வரும் குடியரசு தினத்தன்று வெளியாக உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து நடித்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மகான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் மகான். பொங்கலுக்கு முன் ஜனவரி 12ல் இந்தப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம், துருவ், சிம்ரன் பக்கா, பாபி சிம்ஹா, வாணி போஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எதற்கும் துணிந்தவன்

Surya

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த ஆண்டு சூர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப்படத்தில் ஸ்டைலான லுக்கில் வருகிறார் சூர்யா. இது ஒரு ஆக்ஷன் படம். இந்தப் படம் 5 மொழிகளில் பொங்கலை அடுத்து வரும் பிப்ரவரி 4ல் வெளியாக உள்ளது.

தொடர்ந்து விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், கமல்ஹாசனின் விக்ரம், தனுஷின் மாறன், விஜய் நடிக்கும் பீஸ்ட் ஆகிய படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top