`புத்தியுள்ள மனிதரெல்லாம்’ பாடல் எப்படி உருவாச்சு தெரியுமா... கண்ணதாசனின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
அன்னை படத்தில் சந்திரபாபு பாபுவின் 'புத்தியுள்ள மனிதரெல்லாம் புத்திசாலி’ பாடல் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் தத்துவப் பாடல்களில் முக்கியமானது. கவிஞர் கண்ணதாசன் எந்த சூழ்நிலையில் இந்தப் பாடலை எழுதினார் என்று தெரிந்தால், அவரின் புத்திசாலிதனத்தைப் புரிந்துகொள்ளலாம்.
பராசக்தி படத்தின் வெற்றி மூலம் பிரபலமடைந்திருந்த இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் 1962-ம் ஆண்டு வெளியான படம் அன்னை. பானுமதி, சௌகார் ஜானகி, என்.வி.ரங்காராவ் மற்றும் சந்திரபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 1962 டிசம்பர் 15-ம் தேதி வெளியான படம் நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.
வங்காள எழுத்தாளர் நிஹர் ரஞ்சன் குப்தா எழுதி, அதேபெயரில் வங்க மொழியில் படமாக்கப்பட்ட மாயமிர்கா படத்தின் ரீமேக்காக தமிழில் உருவானது. ஏ.வி.எம் தயாரித்த படத்துக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களை எழுதியிருந்தார். ஆர்.சுதர்சனம் இசையில் கண்ணதாசன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். அழகிய மிதிலை நகரிலே மற்றும் புத்தியுள்ள மனிதரெல்லாம் போன்ற பாடல்கள் இசை ரசிகர்களின் ஆதர்ஸமான பாடல்களாக இன்றும் நிலைத்திருக்கின்றன.
இதில், சந்திரபாபு பாடிய 'புத்தியுள்ள மனிதரெல்லாம்’ பாடல் எவர்கிரீன் தத்துவப் பாடலாக வரலாற்றில் நிலைத்துவிட்டது. அந்தப் பாடலை கண்ணதாசன் எந்தமாதிரியான சூழலில் எழுதினார் தெரியுமா... கவிஞர் கண்ணதாசன் சினிமாவைத் தவிர அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆரம்பத்தில் அவர் திராவிட இயக்கத்தில் பயணித்தார்.
ஆனால், ஒரு சில காரணங்களால் 1961-ம் ஆண்டு திமுகவிலிருந்து அவர் விலகினார். பின்னர், தமிழ் தேசியக் கட்சியில் இணைந்த அவர் 1962 தேர்தலில், அந்தக் கட்சி சார்பில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்த அவர் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார். அந்த சூழலில் மன வேதனையில் இருந்த கண்ணதாசனுக்கு அன்னை படத்தில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.
'புத்தியுள்ள மனிதரெல்லாம்’ என்று அவர் எழுதிய பாடலில் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். அந்தப் பாடலில், 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை’ என்று தனது தேர்தல் தோல்வி பற்றி எழுதி ஆறுதல்படுத்திக் கொண்டார். எந்தவொரு சூழ்நிலையிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லும் குணம் படைத்த கவிஞர் கண்ணதாசன், பாடல் மூலம் தனது மன ஓட்டத்தை வெளிப்படுத்தியிருப்பார்.