ராமராஜன் முடியை தூக்கி பார்த்த கமல்ஹாசன்… எல்லாம் 'கரகாட்டக்காரன்' கிளப்புன பீதிதான்...
1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் திரைப்படங்கள் போட்டிப்போட்டு வெளியாகிக்கொண்டிருந்த வேளையில், தனி டிராக்கில் புகுந்து சைலண்ட்டாக மக்களின் மனதில் உட்கார்ந்தவர் ராமராஜன்.
தொடர்ந்து கிராமத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்ததாலோ என்னமோ, தமிழகத்தின் பல கிராமங்களில் ராமராஜனுக்கு ரசிகர்கள் உருவானார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், இவருக்கென்று ஒரு தனி சிறப்பம்சம் ஒன்று உண்டு.
அதாவது ராமராஜன் ஒரு தீவீர எம்ஜிஆர் ரசிகர். ஆதலால் தனது திரைப்படங்களில் மது அருந்தவது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மறுத்தார். இது போன்ற குணாதிசயங்கள் இவரின் மேல் அதிக மரியாதையை தந்தது. என்னதான் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகிய நடிகர்கள் அந்த காலத்தில் சினிமா ரசிகர்களை பங்கிட்டுக் கொண்டாலும், ராமராஜனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது.
ராமராஜனின் வெற்றி ரஜினி, கமல் ஆகியோரை கொஞ்சம் திடுக்கிட வைத்தாலும், “கரகாட்டகாரன்” திரைப்படம் அவர்களின் தூக்கத்தை கெடுத்தது என சினிமாத்துறையை சேர்ந்த பலரும் கூறிவந்திருக்கின்றனர். அந்த அளவுக்கு அத்திரைப்படம் தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. இந்த நிலையில் நடிகர் ராதாரவி, ராமராஜனுக்கு நடந்த ஒரு சுவாரஸிய சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
பல காலமாக நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறிவந்த ராமராஜன், தற்போது “சாமானியன்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது அவரது 45 ஆவது திரைப்படமாகும். ராமராஜன் மறுபடியும் ஹீரோவாக கம்பேக் கொடுக்கிறார் என்பதால் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்போடு இத்திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற “சாமானியன்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி “ராமராஜனின் கரகாட்டக்காரன் திரைப்படம் அப்போதுள்ள சக நடிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்திவிட்டது. தனது திரைப்படங்கள் எல்லாம் இனிமேல் வெற்றிபெறுமா என அவர்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.
ஒரு முறை விமான நிலையத்தில் கமல்ஹாசன் ராமராஜனிடம் வந்து அவரின் முடியை தொட்டு தூக்கிப்பார்த்தார். ராமராஜன் என்ன விஷயம்? என கேட்டார். அதற்கு கமல்ஹாசன் ‘இது விக் ஆ? இல்லை சொந்த முடியான்னு பாக்குறதுக்குத்தான்’ என கூறினார். நான் 30 வருடங்களுக்கு பிறகு ராமராஜனை இப்போது பார்க்கிறேன். அதே முடியோடு அப்படியே இருக்கிறார்” என ராமராஜனை புகழ்ந்து பேசினார். ராதாரவி இவ்வாறு பேசியது ராமராஜன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.