மாஸ் படத்தை தவறவிட்ட ரஜினி.. கப் ன்னு பிடித்த விஜய்..

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக பெருவாரியான ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருப்பவர் விஜய். ஆரம்பக்கட்டத்தில் இவரது உருவத்தை பார்த்து கேலி செய்த நபர்களை பிற்காலத்தில் வாயடைக்கச் செய்யும் வகையில் தமிழின் டாப் நடிகராக உருவானார்.
தொடக்கத்தில் குடும்பத் திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த விஜய், அதன் பின் “கில்லி” திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக களமிறங்கினார். “கில்லி” திரைப்படத்திற்கு பிறகு “திருமலை” “திருப்பாச்சி”, “சிவகாசி” என தொடர்ந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்த விஜய், “அழகிய தமிழ் மகன்” திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் சரிவை கண்டார்.
குறிப்பாக விஜய்யின் 50 ஆவது திரைப்படமான “சுறா” மாபெரும் தோல்வி திரைப்படமாக அமைந்தது. எனினும் அதன் பின் “துப்பாக்கி”, “கத்தி” போன்ற படங்களில் நடித்து மீண்டும் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்டார். தற்போது தனது 66 ஆவது திரைப்படமான “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே 2000 ஆம் ஆண்டுகளில் “யூத்”, “ஷாஜகான்” போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் புதிதாக ஒரு ஆக்சன் பாணியில் முயற்சி செய்த படம் தான் “பகவதி”. இத்திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.
இந்த நிலையில் “பகவதி” திரைப்படத்தின் கதையை ரஜினியை நினைவில் வைத்து தான் எழுதியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் பகிர்ந்துகொண்டார். அதாவது ரஜினிக்காக தான் பகவதி ஸ்கிரிப்ட்டை தயார் செய்ததாகவும் ஆனால் ரஜினியை நேரில் சந்திக்கவே முடியவில்லை எனவும் கூறினார்.
மேலும் கூறிய அவர் “ஷாஜகான் திரைப்படத்தின் டிரைலர் அப்போது வந்தது. அத்திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதனை தொடர்ந்து இந்த ஸ்கிரிப்ட்டை விஜய்யிடம் கூறினேன். அவர் நமக்கு ஆக்சனெல்லாம் வருமா என முதலில் தயக்கம் காட்டினார். ஆனால் அதன் பின் ஒத்துக்கொண்டார்” என கூறினார்.
அதே போல் ஷங்கர் இயக்கிய “முதல்வன்” திரைப்படம் முதலில் ரஜினியிடம் தான் சென்றதாகவும் அதன் பின் தான் அதில் அர்ஜூன் நடித்ததாகவும் சில பேச்சுக்கள் உண்டு. இது போல் ஒரு சிலர் தவறவிட்டு ஆனால் அதன் பின் வேறு ஹீரோவை வைத்து ஹிட் அடித்த சம்பவங்கள் தமிழ் சினிமாவில் பல உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.