ரஜினியின் மாஸ் ஹிட் திரைப்படத்தை வாங்கி வெளியிட்ட கமல்ஹாசன் … இதெல்லாம் நம்பவே முடியலையே!!
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொடக்கத்தில் “அபூர்வ ராகங்கள்”, “மூன்று முடிச்சு”, “16 வயதினிலே”, “நினைத்தாலே இனிக்கும்” போன்ற பல திரைப்படங்களில் இணைந்து நடித்து வந்தனர். அக்காலகட்டத்தில் வெற்றி காம்போவாக இருவரும் திகழ்ந்தார்கள்.
எனினும் காலப்போக்கில் இருவரும் தனி தனியாக நடிக்க முடிவு செய்தனர். அதற்கு பின் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. ஆனால் இப்போது வரை இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே திகழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட இருவரும் இணைந்து “பொன்னியின் செல்வன்” டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் இருவரின் நட்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த ஒரு விஷயத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1997 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரம்பா, சௌந்தர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அருணாச்சலம்”. இத்திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். மிகவும் வித்தியாசமான கதைக்களமும் விறுவிறுப்பான திரைக்கதையும் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்போதும் கூட இத்திரைப்படத்தை விரும்பி பார்ப்பவர்கள் பலர் உண்டு.
தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக ரஜினியின் அறிமுக பாடலான “அதாண்டா இதாண்டா”, ரஜினியின் உத்வேகத்தை வெளிப்படும் வகையில் உருவாக்கப்பட்ட “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” போன்ற பாடல்கள் ரசிகர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. இத்திரைப்படம் ரஜினிகாந்த்தின் சினிமா பயணத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற திரைப்படமாக அமைந்தது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது அருணாச்சலம்” திரைப்படத்தின் வெற்றி விழாவில் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் கேடயம் ஒன்றை வழங்கினாராம். இது குறித்து எழுந்த கேள்விக்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் “ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் திரைப்படத்தை கேரள மாநிலத்தில் வெளியிடும் உரிமையை கமல்ஹாசன்தான் வாங்கியிருந்தார். ஆதலால்தான் அத்திரைப்படத்தின் வெற்றி விழாவில் கமலுக்கு கேடயம் வழங்கப்பட்டது” என ஒரு அதிசயத் தகவலை கூறியுள்ளார். இத்தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.