“இரண்டு இன்டெர்வல் கொண்ட ரஜினி திரைப்படம்…” கமல்ஹாசன் கொடுத்த ஃப்ரீ அட்வைஸ்… “படையப்பா” குறித்த சுவாரசிய தகவல்கள்...
கடந்த 1999 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “படையப்பா”. இத்திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
“படையப்பா” திரைப்படம் ரஜினியின் கேரியரிலேயே முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக இதில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த நீலாம்பரி என்ற வில்லி கதாப்பாத்திரம் காலத்திற்கும் பேசப்படும் கதாப்பாத்திரமாக ஆகிப்போனது.
இந்த நிலையில் “படையப்பா” திரைப்படத்திற்கு இரண்டு இடைவேளைகள் விடவேண்டும் என ரஜினிகாந்த் கூறினாராம். ஏன் தெரியுமா?
“படையப்பா” திரைப்படத்தின் நீளம் கிட்டத்தட்ட 4.30 மணி நேரம் கொண்டதாக இருந்ததாம். இந்த 4.30 மணி நேர முழுத் திரைப்படத்தையும் பார்த்த ரஜினிகாந்த், “படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. 4.30 மணி நேரத்தை நாம் குறைக்க வேண்டாம். அப்படியே படத்தை வெளியிடுவோம். இரண்டு இடைவேளைகள் விட்டுவிடுவோம்” என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினாராம்.
இதனை கேட்ட கே.எஸ்.ரவிக்குமார், கமல்ஹாசனிடம் இது குறித்து ஆலோசனை கேட்டாராம். அதன் பின் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துக்கே தொலைப்பேசியில் தொடர்புகொண்டு “ரஜினி, நீங்க ஏன் இரண்டு இன்டெர்வல் விடனும்ன்னு சொல்றீங்க? ஹாலிவுட்டில் கூட இது போன்ற முயற்சிகளை எடுக்கமாட்டார்கள். இரண்டு இன்டெர்வெல் விட்டால் நமது ரசிகர்கள் வெறுத்துப்போய்விடுவார்கள்.
நீங்கள் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுங்கள். அவர் அழகாக எடிட் செய்து ஒரு நல்ல திரைப்படமாக படையப்பாவை உருவாக்கிவிடுவார்” என ஆலோசனை கூறினாராம். அதன் பிறகுதான் கே.எஸ்.ரவிக்குமார் “படையப்பா” திரைப்படத்தை 3 மணி நேரம் வருமாறு எடிட் செய்து படத்தை வெளியிட்டாராம்.