ரஜினிகாந்த் என்றாலே நமக்கு நினைவில் வருவது அவரது பஞ்ச் டயலாக்குகள்தான். ரசிகர்கள் ரஜினி திரைப்படத்தை பார்க்கும்போது மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருப்பது பஞ்ச் டயலாக்குகளுக்காகத்தான். அந்த அளவுக்கு ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை மூட்டுவதாக இருந்தது.

“நான் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி”, “கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும்”, “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்”, “நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்”, “கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சி போச்சு” போன்ற ரஜினிகாந்த்தின் பல பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக திகழ்பவை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் பேசிய முதல் பஞ்ச் வசனம் குறித்தான சுவாரஸ்ய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.
1977 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சிவக்குமார், சுமித்ரா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “புவனா ஒரு கேள்விக்குறி”. இத்திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். பஞ்சு அருணாச்சலம் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் ஆகியவைகளை அமைத்திருந்தார்.
இதையும் படிங்க: ஹீரோ அடிச்சாதானே கைத்தட்டுவாங்க… ஆனா இங்க என்ன உல்டாவா நடக்குது?? ரஜினி படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கதாசிரியர்…

இத்திரைப்படத்தில் சிவக்குமார் கதைப்படி பெண்களை ஆசைக்காட்டி மோசம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு காட்சியில் சிவக்குமார் ஒரு பெண்ணிடம் சகவாசம் வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைவார். சிவக்குமார் தவறு செய்து வந்திருப்பதை தெரிந்துகொண்ட ரஜினிகாந்த் “கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சாலும் அது செரிக்காது. வயித்த கிழிச்சிட்டு வெளிய வந்துரும்” என ஒரு பஞ்ச் வசனத்தை கூறுவாராம். இந்த வசனம்தான் ரஜினிகாந்த் பேசிய முதல் பஞ்ச் வசனம் என்று கூறப்படுகிறது.
