கமல் படத்திற்கு ரஜினி வைத்த டைட்டில்… பொது மேடையில் சஸ்பென்ஸை உடைத்த கே எஸ் ரவிக்குமார்..
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். “அபூர்வ ராகங்கள்”, “மூன்று முடிச்சு”, “16 வயதினிலே”, “அவள் அப்படித்தான்”, “நினைத்தாலே இனிக்கும்”, “இளமை ஊஞ்சலாடுகிறது” என பல கிளாசிக் திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த காலத்தில் ரஜினி-கமல் காம்போ ஒரு வெற்றி காம்போவாக திகழ்ந்தது.
அதனை தொடர்ந்து ஒரு காலக்கட்டத்தில் இருவரும் தனி தனியாக திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கினர். ஆனாலும் இவர்களின் நட்பு இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கே எஸ் ரவிக்குமார் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதாவது கமல்ஹாசன் ஒரு திரைப்படத்திற்கான ஒன் லைனை கூற, அதனை கே எஸ் ரவிக்குமாரும், வசனக்கர்த்தா கிரேஸிமோகனும் இணைந்து திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த விஷயம் ரஜினிக்குத் தெரியவர ரஜினி “இத்திரைப்படத்திற்கு தெனாலி என்று பெயர் வையுங்கள்” என ரவிக்குமாரிடம் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து இந்த டைட்டிலை கமலிடம் கூறியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். கமலும் டைட்டில் நன்றாக இருக்கிறது என ஓகே சொல்லியுள்ளார். ஆனால் இந்த டைட்டிலை வைத்தது ரஜினிகாந்த்தான் என கமலிடம் அவர் கூறவில்லை.
அதனை தொடர்ந்து “தெனாலி” திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற பிறகு அத்திரைப்படத்தின் வெற்றிவிழாவில் ரஜினியும் கலந்துகொண்டார். அப்போது விழாவில் பேசிய கே எஸ் ரவிக்குமார் “இத்திரைப்படத்திற்கு தெனாலி என்று பெயர் வைத்தது ரஜினி சார்தான். இது எனக்கும் கிரேஸி மோகனுக்கும் மட்டும்தான் தெரியும்” என கூறினார்.
இதனை கேட்ட கமல்ஹாசன் ஷாக் ஆகிவிட்டாராம். அருகில் அமர்ந்திருந்த ரஜினிகாந்திடம் “நீங்கள்தான் இந்த் டைட்டிலைச் சொன்னதா?” என கேட்டு இருவரும் நட்பு பாராட்டிக்கொண்டார்களாம்.
இது குறித்து கே எஸ் ரவிக்குமார் அப்பேட்டியில் பேசியபோது “வெளியில்தான் கமல், ரஜினி திரைப்படங்களுக்கு போட்டி நிலவுமே தவிர, அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள்தான்” எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
“தெனாலி” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படமாகும். கமல்ஹாசன் அதில் மிகவும் பயந்த சுபாவமுள்ள கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். பயத்தை குறித்து அவர் பேசும் வசனங்கள் இன்றும் மிகவும் ரசிக்கப்படுபவை.