சொன்னா கேட்டா தானே… ரஜினி எவ்வளவோ சொல்லியும் கேட்காத நடிகர்… உயிர் போனதுதான் மிச்சம்!

rajnikanth
முந்தானை முடிச்சு என்ற படத்தில் நடித்ததும் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகர் சிட்டிபாபு எனும் தவக்களை. முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் அட்டன்டன்ஸ் எடுப்பார். ஒவ்வொருவரின் பெயராக சொல்லும் போது தவக்களையின் பெயரையும் சொல்லிக் கூப்பிடுவார்.
'என்னடா சத்தம் மட்டும் வருது. ஆளைக் காணோம்'னு பாக்கியராஜ் பார்ப்பார். அப்போ தவக்களை எழுந்து நிற்பார். அவரே 3 அடிதான் உயரம் இருப்பார். அப்படி இருந்தாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப தவக்களைக்கு அபாரமான நடிப்புதான்.
தவக்களை அந்தப் படத்தில் வரும் சீன் எல்லாமே அதகளமாகத் தான் இருக்கும். அந்தப் படத்தில் அவரது அப்பாவித்தனம் கலந்த பேச்சு உருவம் எல்லாம் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தன. ஒரே படத்தில் பிரபலமாகி ரஜினி, கமல் என இருவருடைய படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் தவக்களை என்றே சொல்ல வேண்டும்.
அந்தப் படத்துக்குப் பிறகு கமலின் காக்கிச்சட்டை, ரஜினியின் வேலைக்காரன் என தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரின் படங்களில் நடித்து இருந்தார். வேலைக்காரன் படத்தில் நடித்த போது ரஜினியுடன் நட்புறவு ஏற்பட்டது.

அதன் காரணமாக ஒருநாள் ரஜினி சூட்டிங்கில் இருக்கும்போது தவக்களை அவரைப் பார்க்க வந்தார். ஏன்னா தான் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அந்தப் பட விழாவை நீங்கள் தான் திறந்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டார் ரஜினிகாந்த். தவக்களையை அழைத்து எத்தனையோ பட நிறுவனங்கள் படம் எடுத்து நஷ்டமாகி இருக்கின்றன.
அதில் நானும் ஒருவன். கடைசியாக வள்ளி திரைப்படம் எனக்கு ஓடவில்லை. இப்போதுதான் நீங்கள் சொந்த வீடு கட்டி சினிமாவில் நல்ல நிலையை அடைந்து இருக்கிறீர்கள். படம் எடுக்கக்கூடாது என்று அறிவுரை சொல்லி அனுப்பினாராம். ஆனால் ரஜினியின் அறிவுரையை ஏற்காத தவக்களை மண்ணில் இந்தக் காதல் என்ற சொந்தப் படத்தைத் தயாரித்து அத்தனை ஆண்டுகள் சினிமாவில் சம்பாதித்து இருந்த சொத்து, வீடு அனைத்தையும் விற்று கடைசியில் அந்தப் படத்தை வெளியிடவும் முடியாமல் மாரடைப்பால் இறந்து போனார்.