ப்ளாஷ்பேக்: சிவாஜி படத்தை பைசாவுக்குத் தேறாதுன்னு சொல்லி பல்ப் வாங்கிய ரஜினி… அட அது சூப்பர்ஹிட்டாச்சே!

sivaji, rajni
நடிகர் திலகம் முதன்முறையாக இயக்குனர் இமயத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அதுதான் முதல் மரியாதை. இந்தப் படத்துக்கும் வழக்கம்போல நெகடிவ் விமர்சனங்கள் வந்துள்ளன. அதுவும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அன்னக்கிளி படத்துக்குக் கதை எழுதிய பிரபல கதாசிரியர் செல்வராஜ் என்ன சொல்றார்னு பாருங்க.
முதல் மரியாதை படத்தை இயக்கியவர் பாரதிராஜா. அந்தப் படத்தைப் பார்த்த ரஜினி இந்தப் படம் குருட்டு அதிர்ஷ்டத்துல கூட ஓடாதுன்னு சொல்லிட்டாராம். தைரியமா இருய்யா… இந்தப் படம் கண்டிப்பா ஜெயிக்குதுன்னு பாரதிராஜா எங்கிட்ட சொன்னாரு. திருச்சி மாரிஸ் தியேட்டர் ஓனர் ராமசாமி படத்தைப் பார்த்துட்டு செக் கொடுத்துட்டாரு. அவரு திருச்சி, தஞ்சாவூர் விநியோக உரிமையை வாங்கினாரு என்கிறார் கதாசிரியர் செல்வராஜ்.
குருட்டு அதிர்ஷ்டத்துல கூட படம் ஓடாதுன்னு ரஜினி எதை வச்சி சொன்னாரு என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆரம்பத்தில் இந்தப் படத்தின் ஷாட்களை சிவாஜியை வைத்து பாரதிராஜா எடுக்கும்போது இங்க பாருங்க. அங்க நில்லுங்க. அப்படி பாருங்கன்னு மட்டுமே சொல்லி எடுத்தாராம்.
அப்போது சிவாஜியும் பாரதிராஜா எதற்கு அப்படி சொல்கிறார்னு அவர் சொல்றபடி நடிச்சிக் கொடுத்தாராம். அப்புறம் அதை ஸ்கிரீன்ல பார்க்கும்போதுதான் பாரதிராஜாவைப் பார்த்துப் பாராட்டினாராம். அவ்ளோ அருமையான சீன்கள். அந்த மாதிரி ரஜினி எந்த ரசனையில் சிவாஜி படத்தை அப்படி சொன்னார் என்று தெரியவில்லை.

முதல் மரியாதை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் அன்னக்கிளி கதாசிரியர் செல்வராஜ். இவர் பாரதிராஜாவின் பல படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். அந்த வகையில் இந்தப் படத்தை பாரதிராஜா அவருக்கு சூப்பர்ஹிட்டாக்கிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக கதாசிரியர் செல்வராஜ் வீட்டை எல்லாம் அடமானம் வைத்தாராம்.
1985ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி, ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ் உள்பட பலர் நடித்த படம் முதல் மரியாதை. இளையராஜாவின் இசையில் பாடல்கள் 8. அத்தனையும் தேன் சொட்டு.