வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது... விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ராஷ்மிகா மந்தனா
கன்னடப் படமான கிர்க் பார்ட்டி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரையுலகில் இருந்து வந்த அவருக்கு, தெலுங்கு, தமிழ் திரையுலகங்களும் ரசிகர்களும் மிகப்பெரிய வரவேற்புக் கொடுத்தனர். இப்போது பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாகிவிட்ட ராஷ்மிகாவை ரசிகர்கள் செல்லமாக, 'நேஷனல் கிரஷ்’ என்றே அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட ராஷ்மிகா, தன்னை ஏற்றிவிட்ட ஏணியான கன்னட சினிமாவை மறந்துவிட்டார் என்கிற விமர்சனம் சமீபகாலமாக எழுந்தது.
சர்ச்சையான செய்தியாளர் சந்திப்பு
சமீபத்தில் ஒரு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், தனது முதல் படம் பற்றியும் அதன் இயக்குநர் ரிஷப் ஷெட்டி பற்றியும் பேசவில்லை. கன்னடப் படமான காந்தாரா பற்றிய கேள்விக்கு, அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பேன் என்று ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார். இதையடுத்து, கன்னடத் திரையுலகில் இருந்து வளர்ந்துவிட்டு, தேசிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுவரும் காந்தாரா படம் பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்கிறார் என்கிற ரீதியில் ராஷ்மிகாவை ரசிகர்கள் விமர்சித்தனர்.
மேலும், ஒட்டுமொத்த திரையுலகும் பாராட்டிப் பேசும் படம் பற்றி சமூக வலைதளங்களில் கூட ராஷ்மிகா பதிவிடாதது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். ஒரு கட்டத்தில், கன்னடப் படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்குத் தடை விதிக்கப்படலாம் போன்ற செய்திகள் றெக்கை கட்டி பறந்தன. இதுபற்றிய விமர்சனங்கள் வலுத்து வந்த நிலையில், அவற்றுக்கெல்லாம் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார் ராஷ்மிகா.
இதுபற்றி அவர் பேசுகையில், 'காந்தாரா படம் வெளியாகி 2-3 நாட்களில் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அப்போது நான் படம் பார்க்கவில்லை. அதைத் தான் சொன்னேன். நான் சொன்னதைத் திரித்துப் பேசிவிட்டார்கள். அதன்பின்னர், படத்தை நான் பார்த்துவிட்டு, படத்தின் வெற்றிக்கு படக்குழுவுக்கு வாழ்த்தும் சொல்லிவிட்டேன். அதற்காக காந்தாரா படக்குழுவினர் எனக்கு நன்றியும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முகத்தை காட்டாமல் சினிமாவில் ஃபேமஸான டாப் 5 கதாபாத்திரங்கள்… உங்க ஃபேவரிட்டும் இருக்காங்க?
இதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரிந்துவைத்துக் கொண்ட சில தகவல்களை வைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது. என்னுடைய சினிமா பற்றி விமர்சனங்கள் சொன்னால், தேவைப்படுவதைத் திருத்திக் கொள்வேன். ஆனால், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவதற்கெல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.