நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, பைக்கில் நெடுதூரம் பயணிப்பது என பல விஷயங்களில் ஆர்வம் உண்டு. சினிமாவில் நடிக்க வந்தபோது பைக் ரேஸில் நிறைய கலந்து கொண்டார். அதில் அவருக்கு நிறைய அடியும்பட்டு உடலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பின் மனைவி ஷாலினி அதற்கு தடை போட்டு விட்டார்.
அதேநேரம் கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸ்களில் விளையாடி வருகிறார். அஜித் கார் ரேசிங் என்கிற ஒரு தனி நிறுவனத்தை இதற்காக அஜித் துவங்கியிருக்கிறார். துபாயில் துவங்கிய கார் ரேஸ் அதன் பின் ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. அதன்பின் மலேசியாவில் நடந்தது. விரைவில் துபாயில் மீண்டும் நடக்கவிருக்கிறது. இந்த போட்டியிலும் அஜித் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்நிலையில்தான் கடந்த சில நாட்களாகவே அஜித்தை பார்க்க பல சினிமா பிரபலங்கள் மலேசியாவுக்கு சென்றனர். முதலில் சிம்பு சென்றார். அதன்பின் சத்யராஜின் மகன் சிபிராஜ் தனது மனைவி மகனுடன் சென்றார்.. ஜிவி. பிரகாஷ் சென்றார். மேலும், நடிகை நயன்தாரா மற்றும் அவரின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் அஜித்தை சந்தித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலானது.
இவர்கள் ஆர்வத்தோடு அஜித்தை பார்க்க மலேசிய சென்றதாகவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அஜித்தே அவர்களை கூப்பிட்டதாக தற்போது செய்தி கசிந்திருக்கிறது. இதற்கு பின்னணியில் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸை தமிழ்நாட்டு மக்களிடம் பிரபலப்படுத்துவது தான் என் லட்சியம் என் அஜித் ஏற்கனவே சொல்லியிருந்தார்.
மக்களிடம் மோட்டார் ரேஸ் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே பிரபலங்களை தன்னை பார்க்க அவர் அழைத்து வருகிறார் என ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.




