விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் பூஜாஹெக்டே, மமிதா பைஜூ, பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரகாஷ்ராஜ் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். விஜய் தீவிர அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி திரைப்படமாக கருதப்படுகிறது.
இந்த திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. எனவே இந்த படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது. மேலும் தியேட்டர்களை வளைக்கும் வேலைகளையும் இப்படத்தை வாங்கியுள்ள வினியோகஸ்தர்கள் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில்தான் நேற்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் ஆளுங்கட்சிக்கு எதிராக மிகவும் கடுமையாக பேசியிருக்கிறார். இது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மிகவும் கோபப்படுத்தி இருக்கிறதாம்.
எனவே ரெட் ஜெயின்ட் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் பராசக்தி திரைப்படத்தை ஜனவரி 10ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். இதற்கு முன் இந்த படத்தை ஜனவரி 14ம் தேதி வெளியிட முடிவெடுத்திருந்தனர். விஜயின் பேச்சு அவர்களின் முடிவை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் ஜனவரி 23ம் தேதி அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தில் ரீ-ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனராம். இந்த படத்தையும் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ்தான் வெளியிடுகிறது. இதை பார்க்கும்போது கண்டிப்பாக ஜனநாயகன் திரைப்படம் ஒரு தியேட்டரில் தொடர்ந்து மூன்று வாரங்கள் ஓடாது என கருதப்படுகிறது. மொத்தத்தில் பராசக்தி மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் மூலம் ஜனநாயகன் படத்திற்கு குடைச்சல் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
