தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த ரகுவரன், வில்லன் நடிகராக மட்டுமல்லாமல் குணசித்திரக் கதாப்பாத்திரத்திலும் சிறப்பாக நடிப்பவர். குறிப்பாக “யாரடி நீ மோகினி” திரைப்படத்தில் தனுஷுக்கு மிகவும் யதார்த்தமான தந்தையாக நடித்து நம்மை ரசிக்கவைத்திருப்பார்.

தனுஷுக்கு எப்படி ஒரு யதார்த்த தந்தையாக ரகுவரன் நடித்திருந்தாரோ அதே போல் ஒரு திரைப்படத்தில் மிகவும் பாசமான தந்தையாக நடித்து நம்மை உருகவைத்திருப்பார். அத்திரைப்படம்தான் “அஞ்சலி”.
1990 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அஞ்சலி”. இத்திரைப்படம் ஒரு சிறந்த குழந்தைகள் திரைப்படமாக அமைந்தது. அஞ்சலி என்ற மனவளம் குன்றிய குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஷாமிலி, மிகவும் கியூட்டான குழந்தையாக வலம் வந்து நம் உள்ளங்களை கொள்ளைக்கொண்டார்.

அதுவும் கிளைமேக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை அழவைத்துவிடுவார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “எழுந்திரு அஞ்சலி, எழுந்திரு” என வசனம் இன்றளவும் பிரபலமான ஒன்று.
“அஞ்சலி” திரைப்படத்தின் மற்றும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் நடிகர் தருண், கிருஷ்ணா, ஆர்த்தி என பலரும் அத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்கள். இந்த நிலையில் “அஞ்சலி” திரைப்படம் குறித்த ஒரு சுவாரசிய தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் நடிகை ரேவதி.

அதாவது “ரகுவரன் ஒரு தீவிரமான நடிகர். அஞ்சலி திரைப்படத்தில் ரகுவரன் மிகவும் உயரமாக தெரிவார். நான் அவர் முன் மிகவும் குட்டையாக தெரிவேன். ஆதலால் ரகுவரன் பல காட்சிகளில் முட்டிப்போட்டுத்தான் நடித்தார்.
ரகுவரன், நான், அத்திரைப்படத்தில் நடித்திருந்த குழந்தைகள் என அனைவரும் ஒரே ஃபிரேமில் வரவேண்டும் என்றால் அவருக்கு அப்படி நடிப்பதை தவிர வேறு வழியே இல்லாமல் இருந்தது” என கூறினார்.
ஒரு திரைப்படத்திற்காக இந்த அளவுக்கு மெனக்கிடுவதை பார்க்கும்போது, நடிப்பின் மீதான ரகுவரனின் வெறி இதில் இருந்து புலப்படுகிறது.
