
Review
மன நோயாளியாக சிவகார்த்திகேயன்.. ஒரு டைப்பா இருக்கு மதராஸி.. பயில்வான் விமர்சனம்
அமரன் திரைப்படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மதராஸி திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.
அதில், “இந்த படத்திற்கு மதராஸி ஏன் பெயர் வைத்தார்கள் என்றால் நம்மளை வெள்ளைக்காரன் மற்றும் வட இந்தியர்கள் அப்படித்தான் அழைப்பார்கள். இதுதான் இந்த படத்தின் கதை அமைப்பு. விஜய் துப்பாக்கியை கோட் படத்துல நம்ம ஆளுகிட்ட கொடுத்துட்டு போனாரோ அந்த துப்பாக்கி பற்றிய படம்தான் ”மதராஸி”. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், டான்சிங் ரோஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அனிருத் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு ஜாலியான மன நோயாளி மாதிரியான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இடைவேளை வரை படம் ஜாலியாக போகிறது. அவர் நடிகை ருக்மணி வசந்தை காதலிக்கிறார். நடிகையின் குடும்பம் வில்லன் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறது. சென்னை ஹார்பரில் கடத்தல் நடக்கிறது. அந்தக் கடத்தலில் முக்கியமானது என்று பார்த்தால் எல்லாம் துப்பாக்கியாக இருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம் வித்யூத் ஜம்வால் மற்றும் டான்சிங் ரோஸ்தான். விக்ராந்த் கடற்படை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கும் வில்லன் கும்பலுக்கும் இடையே மோதல் நடக்கிறது. இந்த மோதலுக்கு நடுவில் நடிகை ருக்மணியின் குடும்பம் மாட்டிக் கொள்கிறது. அவர்களை காப்பாற்றுவதற்காக ஹீரோ சிவகார்த்திகேயன் உள்ளே வருகிறார். இதுதான் இந்த படத்தின் மேலோட்டமான கதை.

படம் ஒரு டைப்பா இருக்கு. ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை நல்ல மோல்ட் பண்ணி கொண்டு வந்திருக்கிறார். சிவகார்த்திகேயன் கிட்ட இப்படி ஒரு ஆக்டிங் ஸ்கில் இருக்கா? என்ற ஆச்சரியப்படும் அளவிற்கு செதுக்கியுள்ளார். அதேபோல நடிகை ருக்மணி வசந்த் யாருப்பா இந்த மொக்கை நடிகை என்று வருத்தப்படும் அளவிற்கு இல்லாமல் சூப்பராக நடித்துள்ளார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இவர் வருவார். அதேபோல விக்ராந்த் பல படங்களில் ஹீரோவாக கலக்கியவர். இந்த படத்தில் இவரும் பிஜுமேனும் தேசிய பாதுகாப்பு படையில் பணியாற்றுகிறார்கள்.
கதைக்கு ஏற்றார் போல அவர்களின் அர்ப்பணிப்பு பிரமாதமாக இருந்தது. ஹிந்தியில் ஹீரோவாக கலக்கி வரும் வித்யூத் ஜம்வால் தமிழ் படத்தில் இன்னும் நல்ல அறிமுகம் வேண்டும் என்பதற்காக இதில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். விக்ராந்த் மற்றும் வில்லன் கும்பல்களுக்கு இடையே நடக்கும் காட்சிகள் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.
இவர்கள் இருவர்களிடையே சிவகார்த்திகேயன் மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டு வருகிறார். இவர் எந்த பக்கம் போகிறார்? இவருக்கு யார் ஆதரவு கொடுக்கிறார்?. இல்லை வில்லன் கும்பலை அழிக்கப் போகிறாரா? என்று பரபரப்பாக சொல்லியிருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இந்தப் படத்தின் சாராம்சம் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்றால் கேப்டன் விஜயகாந்தின் ரமணா படத்திலிருந்துதான். கிளைமாக்ஸில் விஜயகாந்த் மக்களோடு மக்களா நின்று வசனம் பேசுவார்.
அதனால் அந்தப் படத்தின் கதை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அதேபோல இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் மற்றும் வித்யுத் ஜம்வால் பேசும் வசனங்கள் தியேட்டரில் அனல் பறக்கிறது. சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு இரண்டு மூன்று சண்டை காட்சிகள் கொண்டு ஒரு ஆக்சன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் உருவெடுக்கலாம். ஆனாலிம் சண்டைக் காட்சிகள் தேவையில்லாமல் அதிகமாக இருக்கிறது. இதனால் நீளம் அதிகமாகிறது.

படம் வெளியான ஒரிரு வாரங்களுக்கு பிறகு ஒரு பத்து நிமிஷம் காட்சிகளை குறைத்தால் இந்த படத்திற்கு இன்னும் கூடுதல் பலமாக இருக்கும். அதே சமயத்தில் குடும்ப ரசிகர்களுக்கு ஏற்றத் தீனியை ஏ.ஆர். முருகதாஸ் இதில் வைத்திருக்கிறார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முகத்தை உர்ரென்று சீரியஸாக வைத்திருக்கிறார் அது கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது.
அனிருத்தின் இசை இந்த படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. மற்ற படங்களில் எல்லாம் காப்பி அடித்து போட்டு இருப்பார் ஆனால் இந்த படத்தில் அந்த மாதிரி காபி கட் விஷயம் செய்யாமல் ஒரிஜினல் இசையை போட்டு இருக்கிறார். ஏ ஆர் முருகதாஸுக்கு இந்த படம் கட்டாயமாக வெற்றி கொடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார். அவர் இயக்கிய ஹிந்தி படமும் சரியா போகவில்லை தமிழ் படமும் ஆட்டர் பிளாப்.
அதனால் இந்த படத்தில் வீறு கொண்டு எழுந்திருக்கிறார். தன்னுடைய தோல்வியில் இருந்து மீள்வதற்கு புதிய எழுச்சியோடு வந்திருக்கிறார். எப்படி ரமணாவில் அரசியல் பேசியிருந்தாரோ அதேபோல இதிலும் அரசியல் சம்பந்தப்பட்டுள்ளது. அதேசமயம் சமூக விழிப்புணர்வும் இருக்கிறது. படம் மக்களுக்கு என்டர்டைன் செய்வதை விட சமூக விழிப்புணர்வையும் சொல்ல வேண்டும் அப்படி இந்த படத்திலும் சமூக கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளனர். மதராசி படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் சந்தோஷமாக பார்க்கலாம். என்று தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார்.