
Review
கதை எழுத வக்கில்லாதவன்!.. காட்டு மொக்கய விட மோசம்!.. கூலியை பங்கம் பண்ணும் புளூசட்ட மாறன்!..
Coolie Review: ரஜினி, நாகார்ஜுனா, சௌபின் சாகிர், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான கூலி பட, நேற்று உலகமெங்கும் வெளியானது. படம் நேற்று வெளியான பின் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. ரஜினி, சௌபின் சாகிர், அனிருத்தின் பின்னணி இசை படத்தின் துவக்க காட்சி, இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சி மற்றும் படத்தில் வரும் பிளாஷ்பேக் போன்றவை நன்றாக இருந்தாலும் கதை திரைக்கதை அழுத்தமாக இல்லை என பலரும் சொன்னார்கள்.
இந்நிலையில் இப்படத்தை பிரபல youtube சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் பயங்கரமாக கலாய்த்து விமர்சனம் செய்திருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது:
துறைமுகத்தை நாகார்ஜுனா கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவர் அங்கு என்ன செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க உளவுத்துறையில் இருந்து இரண்டு பேரை அங்கே அனுப்பி இருக்கிறார்கள். இது தனிக்கதை.
ஒரு பக்கம் தலீவர் ரஜினி ஒரு மேன்ஷன் ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் நண்பர் சத்யராஜ் இறந்து போனதை கேள்விப்பட்டு அவரை கொன்றது யார் என கண்டுபிடிக்க வருகிறார். பேன் இந்தியா படம் என்றால் ஒரு மொழியில் அந்த நேட்டிவிட்டியில் படம் உருவாகி அது எல்லா மொழிகளிலும் ஹிட் அடிக்க வேண்டும். ஆனால் தலைவர் என்ன புரிந்து வைத்திருக்கிறார் என்றால் எல்லா மொழிகளிலும் இருக்கும் முக்கிய நடிகர்களை நடிக்க வைத்து விட்டால் அது பேன் இந்தியா படம் என நினைத்துவிட்டார்.

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். ‘கறி வாங்க காசு இல்லாத ஒருத்தன்தான் கருவாட்டை கண்டுபிடிச்சான்’னு. அதுபோல கதை எழுத வக்கில்லாதவன் ஒருத்தன் எழுதின கதை இது. படத்தில் ஐந்து முக்கிய கதாபாத்திரங்கள் காட்டப்படுகிறது. ஆனால் அது எதுவுமே மனதில் பதியவில்லை.. ரஜினி கதாபாத்திரம் உட்பட.. நாகார்ஜுனாதான் முக்கிய வில்லன், ஆனால் அவரின் பாதி வேலையை சௌபின் சாகிர் செய்கிறார். உபேந்திராவை ஜிம் பாய் போல பயன்படுத்தியிருக்காங்க. அவர் யார் என்று ரசிகர்களுக்கே தெரியவில்லை. அவர் எவ்வளவு பெரிய இயக்குனர்.. டெக்னீசியன் அவரை வீணடித்து இருக்கிறார்கள்.
படமே முடிந்து ரஜினி வில்லனை கொன்ற பின் அமீர்கான் தேவையில்லாமல் வருகிறார். அவர் ஏதோ பீடி விளம்பரத்தில் நடிப்பது போல பீடி சுவையை பற்றி பேசுகிறார். அவரை எதற்காக படத்தில் வைத்தார்கள் என்று தெரியவில்லை. வழக்கமா லோகேஷ் படத்துல ஆயுதம் கடத்துறது.. கஞ்சா கடத்துறது என எதாவது இருக்கும்.. இவருக்கு இதை விட்டா வேற ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிடுவாங்க அப்படின்னு இந்த படத்துல வாட்ச் கடத்துறாங்கன்னு வச்சிருக்கார். ஏன்டா வாட்ச் கடத்துறாங்கன்னு கதை எழுதி இருக்கீங்களே.. மூணு மணி நேரம் ஒரு ரசிகன் எப்படி கடத்துவான்னு யோசிச்சீங்களா?.
வில்லன் பெரிய மாஃபியா.. சிண்டிகேட் வச்சிருக்கான்.. அவன் எல்லோரையும் கொலை பண்ணுவான். யாருக்கும் பயப்பட மாட்டான். ஆனா அப்படி கொலை பண்றவங்கள எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு தெரியாம கைய கசக்கிட்டு நிக்கிறாங்க. அவங்கள பார்க்கும்போது நமக்கே பாவமா வந்து ரெண்டு பாடிய கொண்டு போய் நம்ம வீட்டுல வச்சுக்கலாம்னு தோணுது.
படத்துல ஒரு சேர் காட்டுகிறார்கள். அதுலதான் பொணத்தை எல்லாம் டிஸ்போஸ் பண்ணுவாங்களாம். அதுல நாலு ஒயர் சுத்தி வச்சிருக்காங்க.. அந்த சேர வேற தலைவரே நான் இதை செய்கிறேன் என்று என்ன பண்றதுன்னு தெரியாம அந்த ஒயரலாம் தொட்டு தொட்டு பார்க்கிறார்.. அதெல்லாம் பார்க்கும்போது நம்ம உட்காந்து இருக்க சேரே அது மாதிரிதான் இருக்கு. தலைவர் ஒரு சாதாரண கூலி. ஆனால் அவர் எப்படி சொந்தமாக அப்படி ஒரு பெரிய மேன்ஷன் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

அந்த மேன்ஷன்ல 15 பேர் விசில் அடிச்சாதான் வெளிவருவோம்னு சொல்லிட்டு பல வருஷமா உள்ளேயே இருக்காங்க. படம் முடியறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் வெளியே வராங்க, அது ஏன்னு ஒன்னும் புரியல. அதே மாதிரி சௌபின் சாஹிருக்கும் சத்யராஜுக்கும் என்ன பிரச்சனை ஒன்னும் புரியல.
அப்பப்ப நான் யாருன்னு தெரியுமா? எங்கிட்டயேவா.. என தலைவர் கேட்கிறார்.. அந்த டவுட்டுதான் நமக்கும் வருது.. அவரு யாருன்னு தெரிஞ்சு வச்சிருக்க நாகார்ஜுனாவும் அப்பப்ப மறந்து போயிடறாரு. உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குங்குறாரு.. அவருக்கு ஞாபகம் வரும் போது அவரை கொன்னுடுறாங்க.. கடைசியில அமீர்கான் வந்துதான் அவர் யாருன்னு சொல்ல வேண்டி இருக்கு.
தலைவருக்கு ஒரு அதிர்ஷ்டம் இருக்கு.. அவருடைய எந்த படம் வந்தாலும் அது காட்டு மொக்கன்னுதான் சொல்லுவாங்க ஆனா அவருடைய அடுத்த படம் வந்த உடனே இந்த படத்துக்கு போன படம் பரவால்லன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இப்ப ஜெயிலர் நல்ல படமா மாறிடுச்சி.
பொதுவா நாங்க விமர்சனம் சொல்லும்போது நீங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போய் பாத்தீங்கன்னா இது ஓகே படமா இருக்கும்னு சொல்லுவோம்.. ஆனா காட்டு மொக்க படத்தைதான் பார்க்க போறோம்னு நீங்க மைக் செட் பண்ணிட்டு போய் இந்த படத்தை பார்த்தாலும் அதைவிட மொக்கையாதான் இருக்கும்’ என கலாய்த்து இருக்கிறார்.