ஹாங்காங் படத்துல இருந்து சுட்டுட்டு இதுல என்ன சீன்?.. இயக்குநரை வெளுத்து வாங்கிய புளூ சட்டை மாறன்!
மலையாள சினிமாவில் கிரைம் திரில்லர் படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், சீரியல் கொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் சீன் . இந்தப் படத்தில் சூர்யா, நஸ்ரியா, ஆனந்தராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரைம் இன்வெஸ்டிகேஷன், சஸ்பென்ஸ், டார்க் காமெடி எனப் பல அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிடிவான விமர்சனங்கள் அதிகம் வந்தன. தொடர்ந்து 3வது முறையாக வெற்றியை சூர்யா பதிவு செய்துள்ளார் என்று பல விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்ரனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் சீன் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, படத்தின் திரைக்கதை, கதாபாத்திரங்கள், போலீஸ் விசாரணைக் காட்சிகள், நஸ்ரியாவின் சண்டைக் காட்சி எனப் பல விஷயங்களைத் தனது பாணியில் கலாய்த்துள்ளார். அவர் தனது விமர்சனத்தில் படத்தில் வரும் போலீஸ் டிஎஸ்பி மிகவும் புத்திசாலி. எந்த வழக்கைக் கொடுத்தாலும் மிக எளிதாகத் தீர்த்து வைக்கும் திறமை கொண்டவர். ஆனால், அவருக்குப் போலீஸ் துறையில் பணியாற்ற விருப்பமே இல்லை. பலமுறை ராஜினாமா கடிதம் கொடுத்தும் உயர் அதிகாரிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். இதற்கிடையில், அந்தப் பகுதியில் அடுத்தடுத்து மர்மக் கொலைகள் நடைபெறுகின்றன. அந்தக் கொலைகளுக்குக் காரணமான சீரியல் கொலைகாரன் அதே பகுதியில் சுற்றித் திரிவதையும் டிஎஸ்பி கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

கிரைம் இன்வெஸ்டிகேஷன் படங்களை மலையாள இயக்குநர்கள் நன்றாகவே எடுப்பார்கள். ஆனால் இந்தப் படம் அப்படி இல்லை. படத்தில் காட்டப்படும் போலீஸ் ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன் மாதிரியே இல்லை. ஏதோ கார்ப்பரேஷன் ஆபீஸ் மாதிரி இருக்கிறது. அதில் இருப்பவர்களும் போலீஸ் மாதிரியே இல்லை. ஒட்டுமொத்த போலீஸ் டிபார்ட்மெண்டே இருந்தும், ஹீரோ ஒருத்தர்தான் வந்து எல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பது போல எத்தனை சீன்கள்தான் வைப்பார்கள்? படு போர் அடித்துவிட்டது.
ஹீரோவுக்கு ஒரு குறைபாடு இருக்கிறது. அதை மறைக்க ஒரு பயிற்சி எடுக்கிறார். ஆனால் அந்தப் பயிற்சியைப் படம் முழுக்கவா எடுத்துக்கொண்டிருப்பார்? படத்தில் வரும் கதாபாத்திரங்கள் என்ன மாதிரியானவர்கள் என்றே புரியவில்லை. ஹீரோயினுக்கு அடிக்கடி வலிப்பு வருகிறது. ஹீரோவின் அப்பாவுக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறது. ஹீரோயினின் அம்மா எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார். சாராயம் காய்ச்சி விற்கிறார்களாம். ஹீரோயினின் அப்பா போதைப்பொருள் பயன்படுத்துகிறார்.
என்ன மாதிரியான கதாபாத்திரங்களை எழுதியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களுடைய இஷ்டத்திற்குக் கதையை எழுதியிருக்கிறார்கள். நஸ்ரியா ஒரு சண்டைக் காட்சியில் பத்துப் பேரை அடிக்கிறார். ஆனால் கடைசியில் வில்லன் ஒரு பிளாஸ்திரியை அவரது வாயில் ஒட்டி உட்கார வைத்திருக்கிறார். அவரும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அது என்ன லாஜிக் என்றே புரியவில்லை.

இந்தப் படத்தின் இயக்குநர் இதற்கு முன்பு இரண்டு படங்களை இயக்கியுள்ளார். அந்த இரண்டு படங்களுமே நல்ல படங்கள்தான். ஆனால் அவையும் வேறு படங்களிலிருந்து சுட்டு எடுக்கப்பட்டவைதான். இருந்தாலும், எங்கிருந்து எடுத்திருப்பார் என்ற ஆர்வம் நமக்கு இருந்தது. காரணம், காப்பி அடித்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக எடுத்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அவருக்குத் தொழில் சுத்தம் போதவில்லை. அப்பட்டமாகக் காப்பி அடித்திருப்பது தெரிகிறது. Blind Detective என்ற ஹாங்காங் படத்திலிருந்து கதையை எடுத்திருக்கிறார்.** ஈயம் பூசிய மாதிரியும் இருக்க வேண்டும், பூசாத மாதிரியும் இருக்க வேண்டும் என்பதுபோல அந்தக் கதையை மாற்றியிருக்கிறார்.
படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரம் வருகிறது. அதுதான் இன்னொரு ஹைலைட். அந்தக் கதாபாத்திரத்தை எங்கிருந்து எடுத்திருக்கிறார்கள் என்றால், The Silence of the Lambs படத்தில் வந்த கதாபாத்திரத்தை இங்கே தூக்கி வைத்திருக்கிறார்கள்.
படத்தின் கதை நன்றாக வந்திருக்க வேண்டிய கதைதான். ஆனால் டார்க் காமெடி சேர்க்கிறேன் என்ற பெயரில் கெடுத்து வைத்திருக்கிறார்கள். நன்றாக வந்திருக்க வேண்டிய படத்தை மிகவும் சுமாரான, மொக்கையான படமாக எடுத்துவிட்டார்கள்" என்று புளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
