போனி கபூர் வைத்த சம்பள பாக்கி… ஊர்சுற்ற கிளம்பிய அஜித்குமார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்
அஜித்குமார் நடிப்பில் உருவான “துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருமா? என்ற கேள்வி பலரிடமும் இருந்து வந்தது. அதற்கான விடையாக நேற்று “துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
ஏற்கனவே விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் பொங்கலுக்கு மோதவுள்ளன. ஆதலால் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் இருக்கின்றனர்.
இதில் யாராவது ஒருவரின் திரைப்படம் வெளிவந்தாலே திரையரங்குகள் கலைகட்டும். இப்போது அஜித், விஜய் ஆகிய இருவருமே பொங்கலுக்கு மோத உள்ளதால், திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளிக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அஜித்குமார் வாரணாசி பகுதியில் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
அதாவது “துணிவு” திரைப்படத்தில் அஜித்குமார் டப்பிங் பேசவேண்டிய காட்சிகள் இன்னும் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்குமாருக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறாராம். ஆதலால் பாக்கி இருக்கும் சம்பளத் தொகையை தந்தால்தான் அஜித்குமார் டப்பிங் பேசி முடித்துத்தருவாராம். இந்த சம்பள பாக்கி விவகாரத்தால்தான் அஜித்குமார் தற்போது வாரணாசி கிளம்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
“துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகப்போகும் உற்சாகத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இந்த விவகாரம் விரைவில் முடித்துவைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.