சங்கிலி முருகன் தயாரிப்பில் பட்டையைக் கிளப்பிய படங்கள்
நடிகரும், தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் தமிழ்த்திரையுலகில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். ஆனால் இவர் முருகன் சினி ஆர்ட்ஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளார்.
பாக்யராஜ் நடித்த ஒரு கை ஓசை என்ற படத்தில் இவர் சங்கிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். அதில் இருந்து இவருக்கு சங்கிலி முருகன் என்ற பெயர் நிலைத்து விட்டது. இனி சங்கிலி முருகன் தயாரித்த வெற்றிப்படங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.
எங்க ஊரு பாட்டுக்காரன்
1987ல் சங்கிலி முருகன் கதை எழுதி எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். கங்கை அமரன் இயக்கினார். இந்தப்படத்தில் ராமராஜன், ரேகா, நிசாந்தினி, கோவை சரளா, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைப்பில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.
இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் முழுவதையும் மனோ பாடியுள்ளார். செண்பகமே செண்பகமே, அழகி நீ பேரழகி, ஜிங்கனக்கு ஜனக்கு, மதுர மரிக்கொழுந்து, பேச்சி பேச்சி ஆகிய மனது மறக்காத இனிய பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.
பாண்டி நாட்டுத் தங்கம்
1989ல் டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில், சங்கிலி முருகன் தயாரித்த படம். இந்தப்படத்தில் கார்த்திக், நிரோஷா, செந்தாமரை, பப்லு, எஸ்.எஸ்.சந்திரன், கோவை சரளா, செந்தில், எஸ்.என்.லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள்.
சங்கிலி முருகன் இந்தப்படத்தில் முன்சிஃப்பாக நடித்துள்ளார். ஏலேலம் குயிலே, இளம் வயசு பொண்ண, மயிலாடும், பாண்டி நாட்டு தங்கம், சிறு கூட்டுல உள்ள , உன் மனசிலே பாட்டுத்தான்...ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பெரிய வீட்டுப் பண்ணக்காரன்
1990ல் வெளியான இப்படத்தை என்.கே.விஸ்வநாதன் இயக்கியுள்ளார். சங்கிலி முருகன் தயாரித்த படம். கார்த்திக், கனா, எம்.என்.நம்பியார், எஸ்.எஸ்.சந்திரன், காந்திமதி, கோவை சரளா, எஸ்.என்.லட்சுமி, ஒய்.விஜயா, சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளார்.
இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். மல்லிகையே மல்லிகையே, சும்மா நீ, வந்தார வாழ வைக்கும், நிக்கட்டுமா போகட்டுமா, முத்து முத்து மேடை, பட்டிக்காட்டு பாட்டு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நாடோடி பாட்டுக்காரன்
1992ல் என்.கே.விஸ்வநாதன் இயக்கத்தில் வெளியான படம் நாடோடி பாட்டுக்காரன். சங்கிலி முருகன் தயாரித்த படம். கார்த்திக், மோகினி, ஜெய்சங்கர், பீலி சிவம், தியாகு, சின்னி ஜெயந்த், எம்.என்.நம்பியார், ராக்கி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.எஸ்.சந்திரன், செந்தாமரை, செந்தில், விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. ஆகாயத்தாமரை, காதலுக்கு கண்கள் இல்லை, மண்ணையும் பொன்னையும், வாங்க வாங்க, வனமெல்லாம் செண்பகப்பூ, தென்பாண்டி சீமை, சித்திரத்து தேரே வா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
காதலுக்கு மரியாதை
விஜய், பேபி ஷாலினி முதன்முறையாக இணைந்து நடித்த காதல் திரைப்படம். சங்கிலி முருகன் தயாரித்த படம். இது காதலுக்கு உரிய மரியாதையை செலுத்தியதால் ரசிகர்கள், தாய்க்குலங்கள் பெருமளவில் திரண்டு வந்து ஆர்வத்துடன் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்த்து ரசித்தனர்.
1997ல் வெளியான இந்தப்படத்தை பாசில் இயக்கினார். விஜய், ஷாலினி ஜோடியுடன் ராதாரவி, சிவகுமார், ராதிகா, சார்லி, ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்துள்ளனர். படம் மாபெரும் வெற்றி பெற்றது.
என்னை தாலாட்ட வருவாளா, ஆனந்த குயிலின் பாட்டு, ஓ பேபி, அய்யா வீடு தெறந்துதான், ஒரு பட்டாம் பூச்சி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.