அடுக்கடுக்கான கேள்விகளுக்கு துள்ளி விளையாடும் தமிழில் சொல்லி அசத்திய சிவாஜிகணேசன்

by sankaran v |   ( Updated:2022-10-02 17:01:51  )
அடுக்கடுக்கான கேள்விகளுக்கு துள்ளி விளையாடும் தமிழில் சொல்லி அசத்திய சிவாஜிகணேசன்
X

sivaji3

சரஸ்வதி சபதம் படத்தில் முத்தாய்ப்பான காட்சி ஒன்றை இங்கு பகிர்வோம். காட்சியில் கே.ஆர்.விஜயா அரசியாராக வீற்றிருக்கிறார். படைத்தளபதியாக ஜெமினிகணேசன்.

புலவரின் புலமையைப் பரிசோதிக்கும் காட்சி. முதலில் படைத்தளபதி ஜெமினிகணேசன் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அசாதாரணமாக பதில் சொல்கிறார் வித்யாபதி என்ற சிவாஜி.

Saraswathi sabatham

அர்த்தமான கேள்வியையும் ஆழமான பதிலையும் பார்க்கலாமா?

முதலில் அரசியார் கேட்கிறார். திடீரென நான் அழைத்தது உமக்கு வியப்பைத் தந்ததோ? வேண்டா வெறுப்பாக இருந்தது. ஏன் அப்படி? காரணம் புரியவில்லை. புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கு அழைத்தேன்.

ஹா...ஹா...என் புலமையைப் பரிசோதிக்கும் அளவுக்கு திறமைப் பெற்ற பாவலன் இங்கு யாரோ? சகலரும் இங்கு சகலகலைகளும் பயின்றவரே. ஆ....மகிழ்ச்சி... வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.

தளபதியாரே....என அரசியார் ஜெமினிகணேசனுக்குக் கட்டளையிடுகிறாள்.

உமது ஊர்? இதே ஊர். பெயர் வித்யாபதி. தாய் தந்தையர்...? தாய் இல்லை. தந்தை உண்டு. உற்றார் உறவினர்...? இல்லை. சகோதரர்...? அனாதை. உமக்குத் தொழில்? எமக்குத் தொழில் கவிதை. அடுத்து? ஆண்டவன் தொண்டு.

இதற்கு முன்? பிறப்பால் ஊமை. பேச்சு வந்தது? கலைவாணியின் அருளால். ஹஹ்ஹ....நம்பத்தகாதது...! ஹஹ்ஹ..கோழை வீரனாகி தளபதியாக வீற்றிருக்கும்போது ஊமை புலவனாகி பேசுவது நம்பமுடியவில்லையோ..?! அடக்கமாகப் பேசு. அமைதியாகக் கேளும்.

அடுத்து அரசியார் கே.ஆர்.விஜயா கேள்விக் கேட்க ஆரம்பிக்கிறார்.

மெத்தப்படித்து வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகிரும் வித்யாபதி....ஆட்சிக்கு இலக்கணம்? ஆணவமற்ற அரசு. புலவனின் உரிமை...? சுதந்திரப்பறவை...இதயத்தை மகிழ்விப்பது...? குழந்தையின் மழலை. வேதனை தருவது? நண்பனின் பிரிவு..நட்புக்கு உயர்வு? இடுக்கண் களைவது...

எண்ணக்கூடாதது? செல்வத்தின் செருக்கு. பொருள் இல்லாதவர்க்கு..?இவ்வுலகம் மட்டும் இல்லை. அருள் இல்லாதவர்க்கு? எவ்வுலகமும் இல்லை. எங்கும் வேண்டுவது..? ஒழுக்கத்தின் உயர்வு. உயர்வுக்கு வழி...? உண்மையும் சத்தியமும்.

அடுத்தும் நம்ம வித்யாபதியை விடுவதாக இல்லை. இப்போது தளபதியார் கேள்விகளைத் தொடர்கிறார்.

அழியாதிருப்பது..? கவிஞனின் காவியம்...அடுத்து அரசியார் கேட்கிறார். அழிந்து விடுவது...? நிலையற்ற செல்வம். அடுத:து இருவரும் மாறி மாறிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர்.

இது தளபதியார் வீரனுக்கு அழகு...? பேச்சைக் குறைப்பது...புலவனுக்கு முடிவு...? பொன்னேட்டில் இருப்பது. இப்போது அரசியார், முடியாள்பவர் முடிவு...? முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் ஆவர். இப்போது தளபதி...சகிக்க முடியாதது? பச்சைக் குழந்தையின் அழுகை.

sivaji1

இப்போது மற்றொரு தளபதி கேட்டுப்பார்க்கிறார்....தாள முடியாதது? பத்தினி பெண்ணின் சாபம். கேட்க முடியாதது...? தகுதியற்ற கேள்வியும்...அர்த்தமற்ற பதிலும்.

இப்போது தளபதி....பார்க்க முடியாதது..? அடக்கம் இல்லாமை...இப்போது அரசியார், அதற்கு உதாரணம்...உங்களது ஆட்சி...! என நெற்றிப் பொட்டிற் அறைந்தாற் போல் நச்சென்று பதில் சொல்கிறார் வித்யாபதி சிவாஜிகணேசன்.

ஆம்...உண்மையிலேயே அவர் வித்யாபதி தான் என்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார். காட்சியில் சிவாஜியின் நடிப்பு நம்மைக் கட்டிப் போட்டு ரசிக்க வைக்கிறது.

இறுதியில் அரசியார் வித்யாபதி உமது புலமையின் திறமையை மெச்சுகிறேன். இன்று முதல் உங்களை எங்கள் ஆஸ்தான புலவராக நியமிக்க முடிவு கட்டுகிறேன். நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால்..முழுமனதுடன் நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாமா? ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்? ஆண்டவன் சந்நிதானத்துக்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள்..!

sivaji2

தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து இறைவனுக்கு அடியவனாக இருக்கும் நான் இந்த அரசிக்கு அடிமையாக மாட்டேன் என்கிறார் கம்பீரத்துடன். உடனே தளபதியார் கோபத்துடன் எழுந்து, ஆணவம் பிடித்த புலவரே...எப்போது எமது அரசியின் கட்டiiயை மதிக்கத் தவறினாயோ அப்போதே உமக்கு இங்கு ஆஸ்தான புலவராக அமரும் யோக்கியதை இல்லை என முடிவு கட்டி விட்டோம்.

போகட்டும். அழைத்த மரியாதைக்காக. நாங்கள் அனைவரும் கேட்க. அரசியைப் பாராட்டி ஒரே ஒரு கவி பாடி விட்டுப் போ...என்கிறார். பாடுவதில்லை. எப்படி...? என ஏற இறங்கப் பார்க்கிறார் அரசியார்.

இறைவனைப் பாடும் வாயால் இடையிலே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை. இப்போது தளபதி, பாடாமல் உம்மை விடப்போவதில்லை. இந்தப் பலாத்காரத்தைக் கண்டு பயப்படுவதில்லை.

அடுத்த தளபதி, உம்மை பணிய வைக்கி றோமா...இல்லையா பார்...! உங்களுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள். உடனே அரசியார், புலவனே...என் ஆட்சியில் எனது நாட்டில் என்னுடைய பிரஜையாக இருந்து கொண்டு என்னையே எதிர்க்கத் துணிவு வந்துவிட்டதா உனக்கு..?!

நாடு...ஆட்சி...மன்னன்...பிரஜை...இவை அனைத்தும் விதி விளையாடிவிட்டால் நாளை மாற்றான் கை. அதற்குள் இத்தனை நாடகமா? வேடம் பூண்டு கலைவது போல் விடிந்தால் எத்தனை எத்தனை மாற்றங்களோ? நேற்று இருந்தார் இன்றைக்கில்லை என்ற தத்துவத்தை மனதில் கொண்டு சற்று நிதானமாகவே நடந்து கொள்ளுங்கள்...! மற்றவரை அடக்கி ஆள நினைத்தவர் அதிக நாள் வாழ்ந்ததில்லை. வாழப்போவதுமில்லை.

உடனே தளபதியார் கோபத்துடன்,..போதும் நிறுத்து...கொண்டு போங்கள்...இவனை...செய்த தவறை சிந்தித்து சிந்தித்து மன்னிப்பு கேட்கும் வரை இவனை சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள். நல்ல ஆட்சி...உயர்ந்த அரசு...சிறந்த தளபதி..பாவம்....மக்கள்...!

இந்தப்படம் 1966ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அப்போது எங்கு பார்த்தாலும் ஒலிப்பெருக்கியிலும் இந்த வசனத்தைத் தான் ஒலிபரப்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரஸ்வதி சபதம் படத்தின் வசனகர்த்தா ஏ.பி.நாகராஜன் தான். எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறார். தமிழ் துள்ளி அல்லவா விளையாடுகிறது.

வசனம் பேசும்போது அவர் நடையும் சிரிப்பும் கண்ணசைவும் அவரை நடிப்பில் மிஞ்ச இனி ஒருவன் பிறக்கப்போவதுமில்லை என்று நிரூபித்துவிட்டார் அந்த உன்னத நடிகர் சிவாஜிகணேசன்.

Next Story