ஸ்டூடியோவிற்குள் சூரியன் போல் நுழைந்த சூப்பர் ஸ்டார்??… முதல் சந்திப்பிலேயே சரோஜா தேவியை மயக்கத்தில் ஆழ்த்திய ஹீரோ…

Saroja Devi
கன்னடத்து பைங்கிளியாகவும் தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்த சரோஜா தேவி, சினிமாத் துறையில் “மகாகவி காளிதாஸா” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
சரோஜா தேவிக்கு தொடக்கத்தில் சினிமாவில் நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சரோஜா தேவி, பள்ளி பருவத்திலேயே நன்றாக பாடக்கூடியவராகவும் நன்றாக நடனமாடக்கூடியவராகவும் திகழ்ந்தார். ஒரு முறை அவரின் பள்ளி விழாவிற்கு வந்த அப்போதைய பிரபல நடிகரான ஹொன்னப்ப பாகவதர், சரோஜா தேவியின் திறமைகளை பார்த்து மெய்மறந்துப்போனார்.

Saroja Devi
உடனே சரோஜா தேவியிடம் சினிமாவில் நடிப்பதற்காக அழைப்பு விடுத்தார். ஆனால் சரோஜா தேவிக்கு சினிமாவில் நடிப்பதில் கொஞ்சமும் நாட்டம் இல்லை. அவருக்கு ஆசிரியை ஆக வேண்டும் என்றுதான் ஆசையாக இருந்ததாம். ஆதலால் முதலில் சரோஜா தேவி விருப்பம் தெரிவிக்கவில்லை.
ஆனால் சரோஜா தேவியின் தாயார் மிகவும் வற்புறுத்த, அந்த வற்புறுத்தலுக்கு இணங்கித்தான் “மகாகவி காளிதாஸா” திரைப்படத்தில் நடித்தாராம் சரோஜா தேவி. இந்த ஒரு படத்தில் நடித்துவிட்டு மீண்டும் பள்ளிப் படிப்பை தொடரலாம் என ஆர்வத்தோடு இருந்த சரோஜா தேவிக்கு, இரண்டாவது திரைப்படத்திற்கான வாய்ப்பும் வந்தது. மீண்டும் தனது தாயாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி அந்த திரைப்படத்திலும் நடித்தார்.
அந்த காலகட்டத்தில் தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில்தான் நடக்கும். இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் பெங்களூருக்குச் சென்றுவிட்டார் சரோஜா தேவி. இப்போதாவது பள்ளிப்படிப்பை தொடரலாம் என ஆர்வத்தோடு இருந்தார் சரோஜா தேவி. ஆனால் சினிமா அவரை பின் தொடர்ந்துகொண்டே வந்தது.

Saroja Devi
அவ்வாறுதான் இயக்குனர் கே.சுப்ரமண்யம் சரோஜா தேவியை சந்திக்க வந்தார். தமிழில் அவர் இயக்கிய “கச்ச தேவயானி” திரைப்படத்தின் கன்னட பதிப்பில் நடிக்க சரோஜா தேவியை அணுகினார். சரோஜா தேவியும் வேறு வழியில்லாமல் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
மீண்டும் சென்னைக்கு பயணித்தார் சரோஜா தேவி. அங்கே வாஹினி ஸ்டூடியோவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென சூரியன் போல் ஒருவர் அந்த செட்டுக்குள் நுழைந்தாராம். அந்த படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவரும் அவரை பார்த்தவுடன் எழுந்து நின்றார்களாம்.
அப்போது சரோஜா தேவியை பார்த்த அந்த நபர், “யார் இந்த பெண்?” என அவர் அருகில் நின்ற இயக்குனர் பந்தலுவிடம் கேட்டாராம். “இவர் பெயர் சரோஜா தேவி. கன்னடத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்” என பந்தலு அவருக்கு அறிமுகப்படுத்த அந்த நபர், கன்னடத்திலேயே நலம் விசாரித்தாராம். அதன் பின் மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டாராம். அவர் போவது வரை பார்த்துக்கொண்டிருந்த சரோஜா தேவி, தனது அருகில் நின்றுகொண்டிருந்தவரிடம் “இந்த நபர் யார்?” என கேட்க, அதற்கு அவர் “யாரை பார்த்து யாருன்னு கேட்குறீங்க. இவர்தான்மா எம்.ஜி.ஆர்” என கூறினாராம் அவர்.
இதையும் படிங்க: “நம்பவச்சி ஏமாத்திட்டீங்களேப்பா!!”… 2022-ல் அதிக எதிர்பார்ப்பில் மொக்கை வாங்கிய டாப் 5 திரைப்படங்கள்…

MGR and Saroja Devi
இவ்வாறுதான் எம்.ஜி.ஆர், சரோஜா தேவி ஆகியோருக்கு இடையான முதல் சந்திப்பு இருந்திருக்கிறது. பின்னாளில் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்து பல திரைப்படங்களில் சரோஜா தேவி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.