திடீர்னு என் கூட யாருமே இல்ல!.. என் படத்துக்கு ஆடியன்ஸே இல்ல!.. மனம் திறக்கும் சசிக்குமார்..
இயக்குனர் பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் அவரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் சசிக்குமார். சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் மாறினார். முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்தின் பாதிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளிவந்தது. அதன்பின் சசிக்குமார் நடித்த நாடோடிகள் மற்றும் போராளி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
ஆனால், அதன்பின் அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. பாலா இயக்கத்தில் அவர் நடித்த தாரை தப்பட்டை திரைப்படமும் தோல்விப்படமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாக சசிக்குமார் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தோல்விப்படங்களாகவே அமைந்தது.
ஆனால், தற்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சமூகவலைத்தளங்கலில் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், நான் 5 டிக்கெட் வாங்கி தருகிறேன், இந்த ஊரில் நான் 10 டிக்கெட் வாங்கி தருகிறேன் என ரசிகர்களே இப்படத்தை புரமோட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுபற்றி ஒரு யுடியூப் சேனலில் பேசியுள்ள சசிக்குமார் ‘கடந்த சில வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டேன். நிறைய நஷ்டம் ஏற்பட்டதால் பல படங்களில் நடித்து கடனை அடைத்தேன். திடீரென பிரச்சனையில் சிக்கி எனக்கு எதுவும் புரியவில்லை. என்னோடு இருந்த பலரும் சென்றுவிட்டனர்.
நமக்கு நாம்தான் உதவ வேண்டும் என்பதை புரிந்து தட்டுதடுமாறி மேலே வந்தேன். இதுவரை 10 இயக்குனர்களை அறிமுகம் செய்துவிட்டேன். அயோத்தி படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் நாள் தியேட்டரில் எந்த கூட்டமும் இல்லை. ஆனால், தற்போது மக்களை அப்படத்தை புரமோட் செய்து வருகிறார்கள். மக்களுக்கு பிடித்துவிட்டால் அவர்கள் அதை எடுத்து சென்றுவிடுவார்கள்’ என சசிக்குமார் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஃபீல்டு அவுட் ஆன ஏவிஎம் நிறுவனத்தை ஸ்கூட்டரில் வந்து காப்பாற்றிய ரஜினி!.. இது புது மேட்டரா இருக்கே?..