கமல் படத்தில் நடிக்க போய் எனக்கு காசு நஷ்டம்!.. சத்தியராஜ் சொன்ன பிளாஷ்பேக்!..
Sathyaraj: தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக நடித்து பின் வில்லனாக புரமோட் ஆகி பல படங்களிலும் கலக்கிவிட்டு அதன்பின் பல படங்களிலும் ஹீரோவாக நடித்து இப்போது வயதுக்கு ஏற்றபடி குணச்சித்திர நடிகராக கலக்கி வருபவர்தான் நடிகர் சத்தியராஜ்.
மணிவண்ணனும், சத்தியராஜும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அப்போதே அவருக்கு இடையே நட்பு உண்டு. மணிவண்ணன் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தபோது சத்தியராஜ் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கேட்ட சத்தியராஜ்!.. விக்ரமுல விட்டதை கூலில பிடிச்சிட்டார்!..
வில்லன்களுக்கு அடியாளாய் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. முழு படத்தில் சத்தியராஜுக்கு கிடைக்கும் ஒரே வசனம் ‘யெஸ் பாஸ்’ என்பதுதான். மேலும், ஹீரோக்களிடம் அடி வாங்கும் வேடத்தில் வருவார். ஒரு கட்டத்தில் நடிப்பு வேண்டாம், இயக்குனராகலாம் என முடிவெடுத்தார் சத்தியராஜ்
அப்போதுதான் மணிவண்னன் இயக்கிய ‘நூறாவது நாள்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதுதான் சத்தியராஜின் திரை வாழ்வை மாற்றியது. அதன்பின் பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடிக்க துவங்கி இப்போது குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார்.
சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் போது தெரியாத ஒன்றையும் தெரியும் என சொல்வார்கள். ஏனெனில் தெரியாது என சொன்னால் வாய்ப்பு கிடைக்காது. இதுபற்றி சத்தியராஜ் ஊடகம் ஒன்றில் பேசியப்போது ‘கமல் சார் ஹீரோவாக நடித்த காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதுதான் நான் மெயின் வில்லனாக நடித்த முதல் திரைப்படம். உங்களுக்கு கராத்தே தெரியுமா என இயக்குனர் கேட்க ‘நான் கோயம்பத்தூரில் பிரவுன் பெல்ட் சார்’ என சொல்லிவிட்டேன்.
எப்படியும் படப்பிடிப்பு துவங்க ஒரு மாதம் ஆகும்.. அதற்குள் கற்றுக்கொள்வோம் என நினைத்தேன். ஆனால், இயக்குனரோ நாளைக்கே ஷூட்டிங் என சொல்லிவிட்டார். எனவே, கமல் சாரை அவரின் வீட்டில் போய் பார்த்து விஷயத்தை சொன்னேன். உடனே, சண்டை இயக்குனரை அழைத்து சினிமாவுக்கான சண்டையில் எப்படி நடிப்பது என எனக்கு பயிற்சி கொடுத்தார். அதன்பின் அந்த படத்தில் நடித்தேன்.
அந்த படத்திற்கு எனக்கு கொடுத்த சம்பளம் 500. ஆனால், சண்டைக்காட்சியில் நடிக்கும்போது என் கையிலிருந்த வாட்ச் உடைந்துவிட்டது. அதன் விலை 650 ரூபாய். முதல் படத்தில் வில்லனாக நடித்ததில் எனக்கு 150 ரூபாய் நஷ்டம்’ என சொல்லி சிரிக்கிறார் சத்தியராஜ்.