செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. சோழர் வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் ஒரு கல்ட் சினிமாவாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் இறுதியில் “சோழன் பயணம் தொடரும்” என்று இரண்டாம் பாகத்திற்கான லீட் வைத்துத்தான் செல்வராகவன் படத்தை முடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக “ஆயிரத்தில் ஒருவன் 2” எப்போது வரும் என்ற கேள்விகள் எழுந்துவந்தது.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு “ஆயிரத்தில் ஒருவன்” இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு போஸ்டர் வெளிவந்தது. பல காலமாக பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அப்டேட் வெளிவந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும் இத்திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் அறிவித்திருந்தனர். இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “நானே வருவேன்” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் “பொன்னியின் செல்வன்” வெளியாவதற்கு முந்தைய நாள் வெளியானதாலும், எந்த வித புரோமோஷனும் இல்லாமல் வெளியானதாலும் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து, “நானே வருவேன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம் ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தாணு “பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடவில்லை” என கூறினார்.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது “மற்ற நாடுகளை போல நாம் நமது கலை பொக்கிஷங்களை பாதுகாத்து வைக்கவில்லை. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டிய கோவில்கள் எல்லாம் கழிவறை போல் கேட்பாரற்று கிடக்கிறது. நமது வரலாறு மேல் நமக்கே ஈடுபாடு கிடையாது.

ராஜராஜ சோழன் சமாதி எங்கே இருக்கிறது என்பது இங்கே பலருக்கும் தெரியாது. இது குறித்து நாம் சிந்திக்கவேண்டும்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “இன்று சோழர்களை பற்றி திரைப்படங்கள் வருவது போல் நிச்சயமாக பாண்டியர்களை பற்றி கூட நாளை ஒரு திரைப்படம் வரும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை நானே கூட இயக்குவேன்” எனவும் கூறினார்.
“ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படத்திற்காக பலரும் காத்துக்கொண்டிருக்கும்போது செல்வராகவன் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும் “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
