40 ஆயிரம் பேர் மத்தியில் சிவாஜிக்கு பிரம்மாண்டமான விழா...ஜெயலலிதா செய்த பேருதவி
இவரது முதல் படம் பராசக்தி. பேரைக் கேட்டதுமே சும்மா அதிருதுல்ல. அவர் வேறு யாருமல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். நடிக்க வந்த புதிதில் இவர் எல்லாம் எடுபட மாட்டார் என்றே பலரும் சொன்னார்கள். ஆனால் முதல் படத்திலேயே சும்மா நச்சுன்னு நடிச்சி பேரு வாங்கிட்டாரு.
சிவாஜியின் படங்கள் அனைத்தும் அவரது விதவிதமான நடிப்புக்குத் தீனி போட்டன. இவரைப் போல வேறு யாரும் உண்டா என்ற கோணத்தில் அனைவரும் சிவாஜியை வியந்து பார்த்தனர்.
அப்படி என்றால் சிவாஜி திரை உலகிற்கு எவ்வளவு கடினமான உழைப்பைத் தந்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள். செவாலியே விருது இவருக்குக் கிடைத்த போது தமிழகத்தில் பெரிய விழா நடந்தது. இதுபற்றி ஏவிஎம் பட அதிபர் சரவணன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்புலகின் சிம்ம சொப்பனம். அதனால் தான் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் பெருமைக்குரிய செவாலியே விருது கிடைத்தது.
அது இந்தியத் திரை உலகிற்கே கிடைத்த பெருமை. இந்த உயரிய விருதைப் பெற்றதற்காக சிவாஜிக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று இயக்குனர் கே.பாலசந்தர் போன்றவர்கள் என்னிடம் வந்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டார்கள்.
அப்போது நான் டெல்லி சென்று இருந்தேன். அங்கே பிரெஞ்ச் கான்ஸலைச் சந்தித்தேன். அவரிடம் செவாலியே விருது பற்றியும், சிவாஜி பற்றியும் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் என்னிடம் அந்த விருதை எடுத்துக் காட்டினார்.
அது மட்டுமில்லாமல், இது உங்களிடம் இருக்கட்டும். நான் சென்னைக்கு வந்து மிஸ்டர் சிவாஜிக்கு பிரசண்ட் செய்யும் போது வாங்கிக் கொள்கிறேன் என்றார். இந்த விழாவைப் பெரிய அளவில் செய்ய வேண்டி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்தோம்.
விழாவுக்கு வருகை தர உடனே சம்மதித்த அவர் ஏ.சி.முத்தையாவிடம் பேசி எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தை அந்த விழாவுக்காக எங்களுக்கு வாங்கிக் கொடுத்தார்.
சுமார் 40 ஆயிரம் பேர் கூடியிருக்க பிரம்மாண்டமாக அந்த விழா நடந்தது. வெளியூர்களில் இருந்து சிவாஜியின் ரசிகர்கள் வேன்களிலும், பஸ்களிலும் வந்து குவிந்து விட்டனர்.
தமிழ்த்திரை உலகமே திரண்டு வந்து கலந்து கொண்டது. பிரெஞ்சு தூதர் செவாலியே விருதை சிவாஜிக்கு வழங்கியதும் கரகோஷம் அடங்க வெகுநேரமானது.
அந்த விழாவில் தான் தி.நகர் தெற்கு போக் சாலையை செவாலியே சிவாஜிகணேசன் சாலை என முதல் அமைச்சர் பெயர் மாற்றம் செய்து அறிவித்தார்.
பம்பாயில் வீர சிவாஜி எப்படி இருக்கிறாரோ அதே போல வெள்ளியில் செய்த சிலை சிவாஜிக்குப் அன்புப் பரிசாக வழங்கினோம். அந்த சிலை இன்னும் அன்னை இல்லத்தில் பத்திரமாக உள்ளது.
அதேபோல அவரது 60வது வயதில் ஒரு பாராட்டு விழா நடத்தினோம். ஆர்ட் டைரக்டர் கங்கா கணையாழி வடிவில் ஒரு பரிசை அமைத்துத் தந்தார். 61 சவரன்களில் அந்தக் கணையாழியைச் செய்தோம். அன்று ஊர்வலமும் நடந்தது.