பின்னணி இசையே இல்லாமல் இசையாக உருகிப் பாடிய பாடகர் இவர் தான்...!

Thiruda thiruda
1980 மற்றும் 90களில் கோலோச்சிய இசை அமைப்பாளர் இளையராஜா. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி, யேசுதாஸ், ஜெயச்சந்திரன், மனோ, சித்ரா, மலேசியா வாசுதேவன் பல பாடல்களைப் பாடி அசத்தினர். அதைத் தொடர்ந்து 90களில் வந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
இவரது வருகைக்குப் பிறகு தான் தமிழ்சினிமாவில் புதுப்புதுப் பாடகர்கள் அறிமுகமாகினர். ஹரிஹரன், சங்கர் மகாதேவன், ஸ்வர்ணலதா, சுஜாதா, ஹரிணி, ஸ்ரீனிவாஸ், சுரேஷ் பீட்டர், சாகுல் ஹமீது, உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன், நித்யஸ்ரீ, மின்மினி என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போனது.
இவர்களில் சாகுல் ஹமீது மிக மிக வித்தியாசமான பாடகர் என்றால் மிகையாகாது. அவரது கணீர் என்ற குரலும், ஏ.ஆர்.ரகுமானுடன் நெருங்கிய நட்பு இவை தான் அதற்குக் காரணம். பலரது இசை அமைப்பிலும் பாடி அசத்தினார் சாகுல் ஹமீது.
24.12.1953ல் தூத்துக்குடி அருகில் உள்ள சிறிய கிராமத்தில் இஸ்லாம் குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதில் இருந்தே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார்.

Shahul Hameed
தொடர்ந்து பல மேடைக்கச்சேரிகளிலும் பாடினார். இந்த நிலையில் திடீரென்று அவருக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
80களின் ஆரம்பத்தில் இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்த இசைத்தென்றல் என்ற பாடும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு 30க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருந்தார்.
அந்தக்கால கட்டங்களில் ஏ.ஆர்.ரகுமான் ஜிங்குஸ் என்ற விளம்பரப்படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டு இருந்தார். அந்த வேளையில் 1982ல் நடந்த ஒரு இசைக்கச்சேரியில் ஏ.ஆர்.ரகுமானின் அறிமுகம் சாகுல் ஹமீதுக்குக் கிடைத்தது.
காலங்கள் உருண்டோட இருவரது நட்பும் நெருக்கமானது. குடும்ப நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவர். இருவரும் இணைந்து 1989ல் தீன் இசைமாலை என்ற இஸ்லாமிய பக்திப்பாடல் தெர்குப்பை வெளியிட்டுள்ளனர்.
அப்போது ஏ.ஆர்.ரகுமான் திலீப்குமார் என்ற தனது இயற்பெயரிலேயே ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இருவரும் இணைந்து வெளியிட்ட அந்த ஆல்பத்தில் எல்லாப் புகழும் இறைவனுக்கே உள்பட பல பாடல்களை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் சாகுல் ஹமீது பாடியுள்ளார்.
1991ல் தமிழில் சிறந்த விளம்பர ஜிங்கிளுக்கான விருதை லியோ காபிக்காக ஏ.ஆர்.ரகுமானின் பெயர் அறிவிக்கப்பட்டது. அந்த விளம்பரப் படத்தை இயக்கியவர் ரகுமானின் நண்பர் ராஜீவ் மேனன்.
ராஜீவ் மேனன் அழைப்பின் பேரில் அவ்விருது வழங்க வந்தார் மணிரத்னம். விருதை வழங்கி கௌரவித்தது மட்டுமல்லாமல் ரகுமானுடன் நெருங்கிய நட்பையும் ஏற்படுத்திக் கொண்டார்.
இதுவே பின்னாளில் இந்திய சினிமாவையே புரட்டிப் போட்ட கூட்டணி அமையக் காரணமாக இருந்தது. 1992ம் ஆண்டு முதல் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணம் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் ஆரம்பமானது.
படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அவருக்குத் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. என்ன இருந்தாலும் தனது ஆஸ்தான நண்பரான சாகுல் ஹமீதைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்று வருந்தவும் செய்தார்.
தொடர்ந்து அந்த வருத்தத்தைப் போக்கும் விதமாக தனது அடுத்த படங்களில் எல்லாம் சாகுல் ஹமீதைத் தவறாமல் இடம்பிடிக்கச் செய்தார் ரகுமான்.
1993ல் ரகுமானின் இசையில் புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்குச் சீமையிலே, உழவன், திருடா திருடா என 5 படங்கள் வெளிவந்தன. இவற்றில் புதிய முகம் தவிர மற்ற படங்களில் எல்லாம் சாகுல் ஹமீது பாடி அசத்தினார்.

Usilampatti penkutti song
1993ல் ஜென்டில்மேன் படம் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்தப்படத்தில் இயக்குனர் ஷங்கர் பிரபலமானதைப் போல உசிலம்பட்டி பெண்குட்டி என்ற பாடலைப் பாடிய சாகுல் ஹமீது மாஸ் ஆனார். இந்தப்பாடலை இவருடன் இணைந்து ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.
தொடர்ந்து அதே ஆண்டில் இயக்குனர் கதிர் இயக்கிய உழவன் படத்தில் மாரி மழை பெய்யாதோ என்ற பாடலையும், பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படத்தில் எதுக்குப் பொண்டாட்டி என்ற பாடலையும், மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படத்தில் ராசாத்தி என் உசுரு என்னதுல்ல பாடலையும் பாடி பட்டி தொட்டி எங்கும் தனது பெயரை நிலைநாட்டினார் சாகுல் ஹமீது.
இவற்றில் கடைசி இருபாடல்கள் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதிலும் ராசாத்தி பாடலுக்கு பின்னணி இசையே கிடையாது.
சாகுல் ஹமீதின் குரல் தான் இசையாகவும் வலம் வரும். ஒருமுறை கேட்டுப்பாருங்கள். அசந்து விடுவீர்கள். 1994ல் ஏ.ஆர்.ரகுமான் உள்பட பல இசை அமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாடி அசத்தினார்.
ஆனால் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இவர் பாடிய வண்டிச்சோலை சின்ராசு, பவித்ரா, மே மாதம், கருத்தம்மா, மே மாதம் ஆகிய பாடல்களால் மட்டுமே அனைவராலும் பாராட்டப்பட்டார்.
வண்டிச்சோலை சின்ராசு படத்தில் இவர் பாடிய செந்தமிழ் நாட்டு தமிழச்சியே பாடல் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.
வைரமுத்துவின் வரிகளும், சாகுல் ஹமீதின் வசீகர குரலும், ரகுமானின் இசையும் பாடலை வெகுவாக ரசிக்க வைத்தது. இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் விதத்தில் இந்தப் பாடல் அமைந்திருப்பது தான் விசேஷம்.

Oorvasi song
1994ல் குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான காதலன் படம் இயக்குனர் ஷங்கருக்கு மாஸ் ஹிட் அடித்தது. இந்தப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் 9 பாடல்கள் கலக்கோ கலக்கு என்று கலக்கியது.
ஊர்வசி ஊர்வசி என்ற பாடலைப் பாடிய சாகுல் ஹமீது செம மாஸ் ஹிட் ஆனார். மே மாதம் படத்தில் மெட்ராஸ சுத்திப் பார்க்கப் போறேன், கருத்தம்மா படத்தில் பச்சைக்கிளி பாடும் என்ற பாடலைப் பாடி அசத்தினார் சாகுல் ஹமீது.
சிந்துநதிப்பூ படத்திற்காக இவர் பாடிய ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்கே பச்சை நரம்பு பாடல் ரொம்பவே ட்ரெண்ட் ஆனது. அதே பாடல் நட்பே துணை படத்திற்காக ரீமிக்ஸ் சாங்காக வந்தது.
அதே ஆண்டு சிற்பியின் இசையில் சரத்குமாரின் நடிப்பில் கேப்டன் படத்தில் இடுப்பு அடிக்கடி துடிக்குது என்ற படம் செம மாஸ். பவித்ரா படத்தில் ஈச்சம்பழம் நவாப்பழம் என்ற காமெடி பாடல் செமயாக இருந்தது. வடிவேலுவுக்காகப் பாடப்பட்ட பாடல் இது.
கோயம்புத்தூர் மாப்ளே படத்தில் விஜய்க்காக பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி பாடலைப் பாடி அசத்தினார். 1997ல் வசந்த் இயக்க நேருக்கு நேர் படத்தில் அவள் வருவாளா பாடல் மனதை மயக்கும் விதத்தில் இருந்தது.
1998ல் ஜீன்ஸ் படத்தில் வாராயோ தோழி வாராயோ தோழி என்ற பாடல் பல பாடகர்கள் பாடியிருந்தாலும் சாகுல் ஹமீது பாடும்போது தூக்கலாக இருக்கும். இதுதான் ரகுமானின் இசையில் சாகுல் ஹமீது கடைசியாக பாடிய பாடல்.
இவர் மும்தாஜ் என்பவரை மணந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் சிறுமிகளாக இருக்கும்போதே சாகுல் தனது 45வது வயதிலேயே 1998ல் காரில் தனது சொந்த ஊருக்குப் பயணம் செய்கையில் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அவரது மரணம் ஏ.ஆர்.ரகுமானைப் பெரிதும் பாதித்தது. ஒரு நல்ல மனிதனை சிறந்த மனுதாபியை இழந்து விட்டேனே என்று ரகுமான் மிகவும் வருத்தப்பட்டாராம்.