டெக்னாலஜியே இல்லாத காலகட்டத்தில் அப்படி ஒரு அபாரமான நடிப்பு...அர்ப்பணிப்பு...ஆச்சரியமூட்டும் மேக்கப்...!

by sankaran v |   ( Updated:2023-09-08 06:02:02  )
டெக்னாலஜியே இல்லாத காலகட்டத்தில் அப்படி ஒரு அபாரமான நடிப்பு...அர்ப்பணிப்பு...ஆச்சரியமூட்டும் மேக்கப்...!
X

Deiva Magan

1969ல் வெளியான படம் தெய்வமகன். சிவாஜி, ஜெயலலிதா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். ரசிகர்களின் மத்தியில் சிவாஜியின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தைப் பற்றியும், சிவாஜியின் நடிப்பு குறித்தும் பழம் பெரும் இயக்குனர் திருலோகச்சந்தர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

A.C.Thirulogachandar

சிவாஜி இளமையிலேயே தனது திறமையை உணர்ந்து கொண்டார். அதனால் தான் நடிப்பை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

அந்தக்காலத்தில் பல நடிகர்கள் அவசியம் பாட வேண்டும். நடனம் கற்றுக் கொடுப்பார்கள், பல வாத்தியங்களை வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எல்லாமே சிவாஜி நன்கு கற்றுக் கொண்டிருந்தார்.

ஆனால், எதுவுமே தெரியாதது போல் நடிப்பார். பாதை மாறாமல், எண்ணம் சிதறாமல் முயன்று முன்னேறியதால் தான் அவர் நடிப்புக்கு சிவாஜி ஆனார். தமிழ் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் வசனங்கள், அவர் கைப்பாவைகள். பிற்காலத்தில் தமிழனுக்கே அழகாகத் தமிழ் பேசக் கற்றுக் கொடுத்தார்.

3 வேடங்களில் சிவாஜி மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட பாத்திரப்படைப்புகள் உள்ள படம் தான் தெய்வமகன்.

ஏதோ ஒரு ஆவேசத்தில் திரைக்கதை, எல்லா சீன்களையும் எழுதி முடித்தேன். எனக்கு திருப்தி இருந்தது. என் கற்பனையில் காட்சிகள் தெளிவாக அமர்ந்து விட்டன. 3 சிவாஜிகளுக்கும், வேஷப் பொருத்தம் தீர்மானித்தோம்.

Sivaji

அப்பா சிவாஜி முகத்தில் ஒரு பாதி அழிந்த கோலமாக இருக்க வேண்டும். மறுபக்கம் சுத்தமாக இருக்கும். நான் வேண்டியபோது மாசு மருவற்ற அழகிய பக்கத்தைக் காட்டிக் கொண்டேன்.

அவருடைய வேதனையையும், ஆத்திரத்தையும் காட்டும் போதெல்லாம் மாசுபட்ட கொடூரமான பக்கத்தைக் காட்டுவேன்.

இந்தக் குறையோடு அவர் கம்பீர புருஷனாகக் கோடீஸ்வரனுக்கே உண்டான கர்வம் கலந்த தெம்போடு நடை போட வேண்டும். அவரும், அவர் மனைவியும் கடைசி வரை காதலர்களாகவே வாழ்ந்தவர்கள். பண்டரிபாய் அவர் மனைவியாக நடித்தார்.

மேலும் அவர்இரு சிவாஜிகளின் தாய், அழகும் நளினமும் ஒடிந்து விழும் அல்லி மலர்போல் அன்பே உருவாக அவரை அழகே உருவாகக் காட்டி இருந்தோம்.

கணவனின் குறை ஒரு போதும் அவர் கண்ணில் குறையாகப் பட்டதில்லை. அடுத்து, தெய்வமகனாகச் சிவாஜி, வஜ்ஜிர உடல்வாகு கொண்டவன். தாய், தந்தை அற்று வளர்ந்த பிள்ளை.

மற்றவர்களால் அவன் குறை பெரிதாக்கப்பட்டு, கொட்டி கொட்டிப் புழுவைக் குளவியாக்கினர். அவனுடைய கோபமும், முரட்டுத்தனமும் தான் அவனுக்குக் காப்பு. அவன் மேல்பட்ட மக்களின் வெறுப்பு, பார்வை, எகத்தாளம் இருளை நோக்கித் தாக்கப் பதுங்கும் மிருகமாக அவனை அலையும், பதுங்கும் புலியாக மாற்றியது.

முகத்தில் அப்பாவை விடச் சிறிது அதிகமாகவே கொடூரத்தன்மை ஏற்றப்பட்டது. அவன் உள்ளம் ஒரு பக்கம் பொங்கும் எரிமலை. மறுபக்கம் குளிர்ந்த திரட்டுப்பால். எது எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே கூடத் தெரியாது.

மூன்றாம் இளைஞன் கோடீஸ்வரனின் தங்க மகன். விளையாட்டுப் பிள்ளை. தாயின் ஆசை மகன். அழகன், மாசு மறுவற்ற அழகன். சற்று வெகுளி, அப்பிராணி.

ஒரே நடிகன் இப்படி 3 மாறுபட்ட குணாதிசயங்களில் நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. 3 பேராக மாறி மேக்கப்புக்குள் புகுந்து கொள்ள வேண்டும். குரல் மாற்றிப் பேச வேண்டும். நடத்தை எல்லாம் மாறுபட்டது. பண்டரிபாய்க்குக் காதல் கணவன், ஆசை செல்ல மகன். புரியாத இனம் தெரியாத பாசப் புதிர்.

அப்போது இந்தளவுக்கு மேக்கப் எல்லாம் கிடையாது. தாதா ஹரிபாபுவின் பிள்ளை தான் புதுவித மேக்கப் போட்டார். ஒரு வித ரசாயனக்கலவை, வினைல், முட்டை, செல்லுலாய்டு, ஸ்பிரிட், கம் என பலவித ரசாயன சேர்க்கையால் ஆனது.

Deivamagan

முகம் படிப்படியாகச் சுருங்கி மேடுபள்ளங்கள், தோல் மடிப்புகள் ஏற்படும். கூடவே ஒரு எரிச்சலும், பிடிப்பும் இருக்கும். மேக்கப் மாற்ற வேண்டும் என்றால், ஒரு களிம்பு போட்டுத் துடைத்து வெந்நீரில் கழுவி, தழும்புகளும் சதை மடிப்புகளும் பொகத் துணியால் வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

3 வேடங்களும் ஒரே நாளில் வந்துவிட்டால் கலைத்துக் கலைத்துப் போட வேண்டும். அவர் பட்ட சிரமத்தை சொல்லி மாளாது.

முதன்முறையாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story