ஐயம் சாரி. எனக்கு டைம் முக்கியம்!.. வெயிட் பண்ண முடியாது!. பிரதமரிடமே கெத்து காட்டிய நடிகர் திலகம்!.
காலம் பொன் போன்றது என்பர். அத்தகைய உன்னதமான காலம் யாருக்காகவும் ஒருபோதும் காத்திருக்காது. இதைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலர் தான் வாழ்வில் எல்லா சூழல்களிலும் வெற்றி பெறுவர். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜியும் ஒருவர். அவர் காலத்தை மதித்து குறித்த நேரத்தில் செயல்படக்கூடியவர்.
காலை 6 மணிக்கு சூட்டிங் என்றால் 5.45 மணிக்கே மேக்அப்புடன் தயாராகி விடுவார். ஒருபோதும் காலதாமதம் என்ற பேச்சே அவரது வாழ்க்கையில் கிடையாது. காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து விடுவார். அவரது வாழ்க்கையில் அவர் காலத்தைத் தவறாமல் கடைபிடித்ததை ஒரு சுவையான சம்பவத்தின் மூலமாகப் பார்ப்போம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சீர்படுத்தி வளர்க்கும் விதமாக பிரதமர் ராஜீவ்காந்தியை சந்திக்க சிவாஜி டெல்லி சென்றாராம். பிரதமரை சந்திப்பதற்கான நாளும், நேரமும் முடிவு செய்யப்பட்டது. அந்த நாளும் வரவே குறித்த நேரத்திற்கு முன்பாகவே சிவாஜி பிரதமரின் இல்லத்திற்குச் சென்று விட்டார். சந்திப்பு முடிந்ததும் அப்படியே சென்னை புறப்படவும் விமான டிக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சிவாஜிக்கு ராஜீவ்காந்தியை சந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால் அவரது அறையில் இருந்து அழைப்பு வரவில்லை. சந்திப்புக்கான நேரமும் முடிந்து விட்டது. ஆனால் பிரதமரிடம் இருந்து அழைப்பு வரவே இல்லை. ஆனால் அதே நேரத்தில் பிரதமர் வெளிநாட்டவர் சிலரை அழைத்துப் பேசிக்கொண்டு இருப்பது சிவாஜிக்கு தெரியவந்தது.
பிரதமரை சந்திக்காமலேயே சிவாஜி விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே பிரதமரிடம் இருந்து அழைப்பு வந்தது. பிரதமரின் உதவியாளர் சார்ஜ் என்பவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு சிவாஜிக்கு வந்ததாம். பிரதமரை சந்திப்பதற்கான எனது நேரம் முடிந்துவிட்டது. இன்னொரு நாள் சந்திக்கிறேன் என்றாராம் சிவாஜி.
ஆனால், சிவாஜியை எப்படியும் சந்திக்க விரும்பினார் ராஜீவ் காந்தி. அதனால், துணைக்குடியரசு தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனிடம் சொல்லி சிவாஜியை டெல்லியில் நிறுத்திவிட நினைத்தார். துணை ஜனாதிபதியும் சிவாஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டார். அதுவும் பலன்தரவில்லை. இதற்கு முன் உள்ள வரலாற்றுப்பக்கங்களைப் புரட்டினால் இத்தாலி நாட்டின் சர்வதிகாரி முசோலினி விரும்பியும் நேதாஜி அவரை சந்திக்க வில்லை. அவரைப்போலவே ஆளுமை குணமும், தேசப்பற்றும் கொண்டவர் சிவாஜி.