Cinema History
நடிகர் திலகம் சிவாஜி நடித்தும் ரிலீஸ் ஆகாத படங்கள்!. அட இவ்வளவு இருக்கா?!…
சிவாஜி நடிப்பில் வெளியான படங்களில் பெரும்பாலானவை சரித்திரம் படைத்தவை. சாதனை படைத்தவை. இப்போது அபார வெற்றி பெற்ற சிவாஜியின் சூப்பர் ஹிட் படங்களை ரசிகர்கள் பட்டியலிட்டு வைத்திருப்பார்கள். அந்த வகையில் ரிலீஸே ஆகாத சிவாஜி படங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. பார்ப்போமா…
ஏழு ஜென்மங்கள் என்ற படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகசந்தர். கதை எழுதியவர் ஏ.எஸ்.பிரகாசம். முதல் ஜென்மத்தில் காதலர்களாக இருந்து தம்பதிகளாக மாறுகின்றனர். அதன்பின் 7 ஜென்மத்திலும் வெவ்வேறு இடங்களில் பிறந்து இணைவது தான் கதை. இந்தப் படத்தில் விதவிதமாக நடிக்கலாமே என்று நினைத்தார் சிவாஜி. ஆனால் படம் நின்று போனது அவருக்கு வருத்தம் தந்ததாம். சாவித்ரி நடித்த பிராப்தம் படத்தின் கதையும் இந்தப் படத்தின் கதையைப் போல இருந்ததால் ஏழு ஜென்மங்கள் படம் வெளியாகவில்லை.
அன்புள்ள அத்தான் என்ற படத்தை ஜானகிராம் இயக்குவதாக இருந்தது. முக்கோண காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ராகினி முதன்முதலாக சிவாஜியின் ஜோடியாக நடித்தாராம். எம்ஆர்.ராதாவும், சாவித்ரியும் படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. படத்திற்கான பூஜையும் நடந்தது. பாதிபடமும் எடுத்தாகி விட்டது. பைனான்ஸ் பிரச்சனையால் படம் நின்று போனது.
முதன்முறையாக ஜோடி சேரலாம் என்று நினைத்து ராகினி மிகவும் வருத்தப்பட்டாராம். சாண்டில்யன் எழுதிய பிரபல நாவல் ஜீவ பூமி. சிவாஜியுடன் எம்ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, சரோஜாதேவி உள்பட பலர் நடிப்பதாக இருந்ததார்களாம். ஆனால் என்ன காரணத்தாலோ இந்தப் படம் வெளியாகவில்லை. இது வட இந்திய சரித்திரத்தை மையமாகக் கொண்ட படம்.
உத்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் சிவாஜி நடிக்க இருந்த படம் சுவீகாரம். இதில் அவருடன் இணைந்து பாலையா, தங்கவேலு, ராகினி உள்பட பலரும் நடிக்க இருந்தனராம். கதை, வசனம் டி.எஸ்.பாலையா. இந்தப் படமும் என்ன காரணம் என்று தெரியாமலேயே நின்று போனது.
ஏஎல்.ஸ்ரீநிவாசன் தயாரிப்பில் வெளியாக இருந்த படம் வசந்தி. சிவாஜியுடன் இணைந்து எஸ்எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, சௌகார் ஜானகி உள்பட பலர் நடிப்பதாக இருந்தது.
கே.வி.மகாதேவன் இசையில் ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளியாகிறது என்றும் விளம்பரம் செய்யப்பட்டன. ஆனால் வெளிவரவில்லை.
பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளியாக இருந்த படம் சாணக்கியா. ஆயிரக்கணக்கான நடிகர்கள் நடிக்கும் படம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ படம் வெளியாகவில்லை. இந்தப் படம் மட்டும் வெளியாகி இருந்தால் சிவாஜியின் திரை உலக வாழ்க்கையில் பெரிய மணிமகுடமாக இருந்து இருக்குமாம்.
எஸ்.பாலசந்தரின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பதாக இருந்த படம் வானவில். சரோஜாதேவி நடித்து இருந்தார். பல நாள்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் நின்று போனது.
முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடிகர் திலகம் நடிப்பதாக இருந்த படம் கிழக்கும் மேற்கும். இந்தப்படமும் நின்று போனது. துர்கா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் திலகத்தின் டம்பாச்சாரி படம் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதாம். இந்தப்படமும் நின்றுபோனது.
பீம்சிங் இயக்கத்தில் வெளிவருவதாக பட்டதாரி படம் இருந்ததாம். இதுவும் வெளிவரவில்லை. சிவாஜி, தேவிகா நடிப்பில் வெளியாக இருந்த படம் ஞாயிறும் திங்களும். பாதிப்படத்திற்கு மேல் நடந்த நிலையில் படம் பாதியில் நின்றது. ஏ.வி.எம்.மின் பூம்புகார், சிவாஜி பிக்சர்ஸின் புலித்தேவன், வி.கே.ராமசாமியின் ஒரு நாள் ராஜா, வானம்படி பிக்சர்ஸின் முதல் தயாரிப்பாக மாடிவீட்டு ஏழை ஆகிய படங்கள் வெளிவருவதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தினோலோ படங்கள் வரவில்லை.
இவை தவிர கங்கையின் சங்கமம், அன்னை பூமி, ஆதிபகவன், பூப்போல மனசு, பெண் பாவம் பொல்லாதது, பாக்ய சக்கரம், (பாகவதரும், சிவாஜியும் இணைந்து நடிப்பதாக இருந்தது.) நடமாடும் தெய்வம், ஜெயித்துக் காட்டுகிறேன், அன்பு மகள், மக்கள் அன்பன் (சிவாஜியுடன் கார்த்திக், ராதா நடிப்பதாக இருந்தது) இப்படி பல்வேறு படங்கள் பூஜை போட்டும், பாதியில் நின்றும் போய்விட்டன. இந்தப் படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தால் நாம் இன்னும் சிவாஜியின் பலவிதமான நடிப்பைப் பார்த்து ரசித்திருக்கலாம்.