ஒரே நாளில் மூன்று படங்கள்...மூன்று வெவ்வேறு கெட் அப்புகளில் நடித்து அசத்திய சிவாஜிகணேசன்..!

Sivaji
தமிழ்சினிமாவை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று சிவாஜிக்கு முன். இரண்டாவது சிவாஜிக்குப் பின். இதில் சிவாஜிக்கு முன் உள்ள படங்களைப் பார்த்தால் சிவாஜியின் சாயலில் எந்த ஒரு நடிகரும் நடித்திருக்க மாட்டார். சிவாஜிக்குப் பின் என்றால் எந்த ஒரு நடிகர் எந்த ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அது சிவாஜியின் சாயல் கண்டிப்பாகத் தெரியும்.
சிவாஜிக்குப் பிறகு வந்த ஒவ்வொரு நடிகரிலும் கொஞ்சமாவது சிவாஜி தெரிவார். நடை, உடை, பாவனைகளை உற்றுக் கவனித்தால் இது நமக்கே தெரியும். நடையில் மட்டுமே கிட்டத்தட்ட 100 வகையான சிவாஜிகள் உண்டு. அவரது ஒவ்வொரு படமே இதற்கு சாட்சி.

Sivaji 111
கிழவனாக, குமரனாக, காதலனாக, முரடனாக, சக்கரவர்த்தியாக, தளபதியாக, ரோகியாக, ஞானியாக, தியாகியாக, நீதிபதியாக, கள்வனாக, கவிஞனாக என ஒவ்வொருவருக்கும் ஒரு நடை, பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என்று இருக்கும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அது மாதிரி தான் அவரது நவராத்திரி படம். தமிழ் கூறும் நல்லுலகம் திருமாலையும், சிவனையும் கண்டது. எப்படி கண்டது என்றால் சிவாஜியின் ரூபத்தில் தான். அது போல தான் சரித்திர நாயகர்களையும் கண்டது.

Sivaji as Kattapomman
கர்ணன், கட்டபொம்மன், திருப்பூர் குமரன், சிதம்பரனார், காளிதாஸ், தெனாலிராமன், அம்பிகாபதி, வரதன், திருஞானசம்பந்தர், பெரியாழ்வார் என மிக நீளமான பட்டியல் உண்டு.
சாமானிய கதாபாத்திரம் என்றாலும் சரி. அவரைப் போல நடிக்க இனி ஒருவர் பிறந்து தான் வரவேண்டும். படிக்காத மேதை படத்தைப் பாருங்கள். ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகளைக் கொட்டுவார். உயர்ந்த மனிதனைப் பாருங்கள். தன்னிகரற்ற நடிப்புக்கு மாபெரும் எடுத்துக்காட்டு.
சிவாஜி யார் என்பதே தெரியாத ஒருவருக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தைக் காண்பித்து அதில் வரும் நாதஸ்வர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரம் உண்மையில் நாதஸ்வர வித்வான் இல்லை என்று சொல்லிப்பாருங்கள். நம்பவே மாட்டார். அங்கு தான் சிவாஜி நிற்கிறார்.

padikkatha methai
சிவாஜியைப் போல பலவித கேரக்டர்களிலும் கெட் அப்புகளிலும் நடித்தவர்கள் யாரும் இல்லை. நாடகக்கலையில் கோலூச்சியவர்களும் இருந்துள்ளார்கள். ஆனால் அதை வைத்து இத்தனை வேறுபாடுகள், இந்தனை மாறுபாடுகள் என தன்னிச்சையாக ஒருவரால் எப்படி காட்ட முடிந்தது? இது ஒரு புரியாத பெரும்புதிர்.
நடிப்பு என்றால் சிவாஜி. சிவாஜி என்றால் நடிப்பு என்பது சினிமாவை நன்கு அறிந்தவர்களின் கூற்று. சில காலகட்டத்தில் ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிப்பாராம். மூன்றும் 3 வகை. 18 மணி நேரம் வேலை. ஒரு படத்திற்கு 6 மணி நேரம். 3 செட்களும் தனித்தனியாகப் போடப்பட்டு இருக்கும்.

Pachai vilakku
உதாரணமாக முதல் செட்டில் பச்சை விளக்கு சூட்டிங் நடக்கும். இதில் குடும்ப சிக்கலில் தவிக்கும் ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருக்கிறார். 2வது செட்டில் கர்ணன்.
இதில் இதிகாச கதாநாயகன். 3வது செட்டில் ஆண்டவன் கட்டளை. வாழ்க்கையை வெறுத்து துறந்த ஒரு மனிதனாக நடித்துள்ளார். இது 3ம் ஒரே நாளில் எப்படி நடிக்க முடிந்தது என்றால் அது தான் சிவாஜி.
அவ்வளவு தூரம் சினிமாவுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தவர். ஒரே நேரத்தில் சென்னையில் மட்டும் அவரது 20 படங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன.
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சிவாஜி இல்லாத தமிழ் சினிமா என்றால் எப்படி இருந்திருக்கும்? அவர் இல்லையேல் தமிழ் சினிமா இந்த ஒரு நிலையில் பாதையில் இருந்து இருக்காது.
இந்திய சினிமாவிலே இப்படிப்பட்ட ஒரு கலைஞன் இல்லை. இனியும் ஒருவன் வரப்போவது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.