Connect with us

Cinema History

பழமைவாதிகளை தனது படங்களின் மூலம் அலற வைத்த புரட்சி இயக்குனர்… அப்பவே அப்படி!!

திராவிட இயக்கம் வளர்ந்து வந்த காலகட்டத்தில் “பராசக்தி” போன்ற பல புரட்சிகரமான திரைப்படங்கள் வெளிவந்து சமூக நீதி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. கலைஞர் கருணாநிதி, எம் ஜி ஆர், எம் ஆர் ராதா போன்றோர் சினிமாவை தங்களது கருத்துக்களை கொண்டுபோகும் ஒரு கருவியாக பயன்படுத்தினர். அப்போது சமூகத்தில் இது போன்ற புரட்சி திரைப்படங்களை பலரும் வரவேற்றாலும் ஒரு பக்கம் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.

ஆனால் கலைஞர் கருணாநிதி, எம் ஆர் ராதா ஆகியோரின் திராவிட இயக்க கருத்துக்கள் சினிமாக்களின் மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய காலகட்டத்திற்கு முன்னமே ஒருவர் புரட்சிகரமான திரைப்படத்தை எடுத்து பழமைவாதிகளை அலறவிட்டார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்!

அந்த புரட்சிகர இயக்குனரின் பெயர் கே. சுப்பிரமணியம். 1904 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்த இவர் தொடக்கத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். அதன் பின் அப்போது வெளிவந்த ஊமைத் திரைப்படங்களை ரசித்து ரசித்து பார்த்த அவருக்கு சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

ராஜா சாண்ட்டோ என்ற பம்பாயைச் சேர்ந்த தமிழர் ஒருவர் அப்போது பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் வந்தார். அவரிடம் சுப்பிரமணியம் சினிமா பயிற்சி பெற்றார். அதே போல் ஆர். பத்மநாபன் என்ற இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

இதனை தொடர்ந்து காரைக்குடியைச் சேர்ந்த அழகப்ப செட்டியார் என்பவரும் லெட்சுமண செட்டியார் என்பவரும் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தனர். அத்திரைப்படத்தை இயக்க சுப்பிரமணியத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

காரைக்குடியில் நடந்த “பவளக்கொடி” என்ற நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க முடிவுசெய்தனர். அந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர் எம். கே. தியாகராஜ பாகவதர். கதாநாயகியாக நடித்தவர் எஸ். டி. சுப்புலட்சுமி. “பவளக்கொடி” திரைப்படத்திலும் இவர்களே முன்னணி கதாநாயகர்களாக நடித்தனர். “பவளக்கொடி”தான் தியாகராஜ பாகவதரின் முதல் திரைப்படம். பின்னாளில் இவர் சூப்பர் ஸ்டாராக ஆகியது வேறு விஷயம்.

1934 ஆம் ஆண்டு “பவளக்கொடி” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. “பவளக்கொடி” திரைப்படத்தை தொடர்ந்து “நவீன சாரங்கதரா” என்ற திரைப்படத்தையும் இயக்கினார். இத்திரைப்படத்திலும் தியாகராஜ பாகவதர் தான் கதாநாயகர். அதன் பின் “குசேலா”, “உஷா கல்யாணம்” ஆகிய திரைப்படங்களை தயாரித்து இயக்கினார்.

இத்திரைப்படங்களை தொடர்ந்து கே. சுப்பிரமணியம் 1937 ஆம் ஆண்டு “பாலயோகினி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். இத்திரைப்படம் சமூக சீர்த்திருத்தத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். அதாவது உயர்குடி விதவை பெண்களை வீட்டில் ஒதுக்கிவைக்கும் துயரத்தை விமர்சித்து இக்கதை எழுதப்பட்டிருந்தது. மேலும் உயர்குடியைச் சேர்ந்த ஒரு விதவை பெண்ணையும் இத்திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார் சுப்பிரமணியம்.

“பாலயோகினி” திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில்தான் இத்திரைப்படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதாவது “சமூக சீர்த்திருத்தம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பழக்கவழக்கங்களை இயக்குனர் கண்டித்திருக்கிறார். வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய ஆச்சாரமான குடும்பத்தின் விதவை பெண்ணை, திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்” என கண்டனங்கள் எழுந்தது. மேலும் கே. சுப்பிரமணியமும் அந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால் அவரை குலத்தை விட்டு விலக்குவதாகவும் அறிவித்தனர். ஆனால் இது குறித்து எல்லாம் சுப்பிரமணியம் கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து “தியாக பூமி”, “சேவாசதனம்” போன்ற புரட்சிகரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார் சுப்பிரமணியம்.

பாகவதர் மட்டுமல்லாது பின்னாளில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட எம். எஸ். சுப்புலட்சுமி,  டி. ஆர். ராஜகுமாரி ஆகிய பலரையும் தனது திரைப்படங்களின் மூலம் அறிமுகப்படுத்திய கே. சுப்பிரமணியம், 1971 ஆம் ஆண்டு தனது 66 ஆவது வயதில் காலமானார். சுதந்திர இந்தியாவிற்கு முன்னமே சமூக சீர்த்திருந்த கருத்துக்களை தனது திரைப்படங்களின் மூலம் பரப்பிய கே. சுப்பிரமணியம் நிஜமாகவே ஒரு புரட்சியாளர்தான்.

google news
Continue Reading

More in Cinema History

To Top