சோழர்கள் மேல் குறிவைத்த மற்றொரு பிரபல இயக்குனர்… கடைசி ஆசையாகிப்போன துயர சம்பவம்…

by Arun Prasad |
சோழர்கள் மேல் குறிவைத்த மற்றொரு பிரபல இயக்குனர்… கடைசி ஆசையாகிப்போன துயர சம்பவம்…
X

மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “உடையார்”, “வேள்பாரி” ஆகிய நாவல்கள் மீது கோலிவுட் இயக்குனர்களின் கண்கள் குறி வைத்துள்ளன.

சு. வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவலை ஷங்கர் படமாக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வேள்பாரியாக சூர்யா நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒன்றாக சேர்ந்து வேள்பாரி என்ற மன்னனின் மீது போர் புரிந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான் “வேள்பாரி”. “பொன்னியின் செல்வன்” நாவலை போலவே “வேள்பாரி” நாவலும் மிகவும் பிரபலமான ஒன்றுதான்.

அதே போல் பாலகுமாரன் எழுதிய “உடையார்” நாவலை செல்வராகவன் இயக்கப்போவதாக திட்டம்போட்டு வைத்திருக்கிறாராம். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டியபோது எதிரிகளால் என்னென்ன சிக்கல்களை சந்தித்தார் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான் “உடையார்”. இது 6 பாகங்களை உடையது. “உடையார்” படித்த தாக்கத்தினால்தான் செல்வராகவன் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தையே இயக்கினார் என கூறுபவரும் உண்டு.

இந்த நிலையில் மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன், எப்படியாவது சோழர்கள் குறித்து ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் என ஆசைப்பட்டாராம். அதாவது தஞ்சை பெரிய கோவிலை மையமாக வைத்து அத்திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என விரும்பினாராம். இதுவே அவரின் கடைசி ஆசையாக இருந்திருக்கிறது என சமீபத்தில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு வீடியோவில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

எஸ் பி ஜனநாதான் மார்க்ஸிய சிந்தனையாளர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவரின் முதல் திரைப்படமான “இயற்கை” மாபெரும் வெற்றிபெற்றது. அதன் பின் இவர் இயக்கிய “ஈ”, “பேராண்மை”, “புறம்போக்கு”, “லாபம்” என அனைத்து திரைப்படங்களிலும் இவரது அரசியலை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஒருவேளை எஸ் பி ஜனநாதன் தஞ்சை கோவிலை அடிப்படையாக வைத்து தனது கனவுத்திரைப்படத்தை இயக்கியிருந்தால், அது “பொன்னியின் செல்வன்” போல் ராஜாக்களை மையப்படுத்தி அல்லாமல், அக்காலத்தில் வாழ்ந்த எளிய மக்களை அடிப்படையாக வைத்துத்தான் அத்திரைப்படத்தை உருவாக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story