தந்தையை பெருமைப்படுத்தி சரித்திரம் படைத்த படங்கள்
தாயை மையமாகக் கொண்ட கதைகள் தமிழ்சினிமாவில் ஏராளமாக வந்து விட்டன. இப்போது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கூற்றுக்கேற்ப தந்தையைப் பெருமைப்படுத்திய படங்கள் எவையேனும் வந்துள்ளனவா என பார்த்தால் வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வகையில் நாம் ஒரு சில படங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
அப்பா
2016ல் வெளியான படம் அப்பா. சமுத்திரக்கனி கதை எழுதி இயக்கியுள்ள முத்தாய்ப்பான படம்.
தயாளனாக வந்து தாய்க்குலங்கள் மற்றும் தந்தைக்குலங்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு விட்டார் சமுத்திரக்கனி. ஒரு பொறுப்பான அப்பா வீட்டிலும், சமுதாயத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் மகனை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் பாடம் நடத்தியுள்ளார்.
இளையராஜா இசை அமைத்துள்ளார். சமுத்திரக்கனியுடன் இணைந்து தம்பி ராமையா, வினோதினி, ராகவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சசிக்குமார் வருகிறார்.
தவமாய் தவமிருந்து
2005ல் வெளியான இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சேரனின் படங்கள் என்றாலே ஏதாவது ஒரு அழுத்தமான கதை இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கிற்கு வருவர். அந்த வகையில் தவமாய் தவமிருந்து எடுத்த இந்தப் படமும் தந்தையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. சேரனின் அப்பாவாக வருகிறார் ராஜ்கிரண்.
மனிதர் நடிப்பில் பார்ப்பவர்களின் மனதைக் கனக்க வைத்துவிடுகிறார். சேரனுடன் இணைந்து பத்மபிரியா, சரண்யா, செந்தில், மீனாள் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சபேஷ் முரளி இசை அமைத்துள்ளார். ஏ ஆக்காட்டி ஆக்காட்டி என்று ஒரு நாட்டுப்புறப்பாடல் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ஒரே ஒரு ஊருக்குள்ளே, உன்னை சரணடைந்தேன் உள்பட பல பாடல்கள் உள்ளன.
இந்தியன்
1996ல் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிப்படம். கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இந்தப்படத்தில் இந்தியாவின் பாரம்பரியமிக்க வீரக்கலையான வர்மக்கலை பயன்படுத்தப்பட்டுள்ளது. தந்தை மகன் உறவில் கமல்ஹாசன் இரு வேடங்களிலும் அட்டகாசமாக நடித்துள்ளார். ஒருவருக்கொருவர் வித்தியாசம் காண முடியாத வகையில் மேக்கப்பில் மிரட்டியிருக்கிறார் கமல்.
இந்தியன் தாத்தாவாக வந்து உலக சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். அக்கடானு நாங்க, மாயா மச்சிந்திரா, பச்சைக்கிளிகள், டெலிபோன் மணிபோல், கப்பலேறிப் போயாச்சு ஆகிய பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
என்னை அறிந்தால்
2015ல் வெளியான இந்தப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். அஜீத்குமார், அனுஷ்கா செட்டி, அருண்விஜய், திரிஷா, பார்வதி நாயர், விவேக், நாசர், ஆஷிஷ் வித்யார்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் பொறுப்பான அப்பாவாக இருந்து தன் மகளைக் கண்ணும் கருத்துமாக கவனிக்கிறார் அஜீத்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். ஏன் என்னை, மழை வரப்போகுதே, உனக்கென்ன வேணும் சொல்லு, என்னை அறிந்தால், அதாரு அதாரு, மாயா பஜார், இதயத்தில் ஏதோ ஒன்று ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
வாரணம் ஆயிரம்
20108ல் வெளியான கலைப்படம் இது. கௌதம் மேனன் இயக்கிய இந்தப்படத்தில் தந்தை மகன் உறவு அற்புதமாக சொல்லப்பட்டுள்ளது. சூர்யா இரட்டை வேடங்களில் வந்து அசத்தியுள்ளார். உடன் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். அடியே கொல்லுதே, நெஞ்சுக்குள் பெய்திடும், ஏத்தி ஏத்தி, முன்தினம், ஓ சாந்தி சாந்தி, அவ என்ன, அலைமேலே பனித்துளி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இவை தவிர டேடி, ஜில்லா, சந்தோஷ் சுப்ரமணியம், அபியும் நானும், ராஜா ராணி, நாயகன், தெறி போன்ற படங்களும் இந்த வரிசையில் வந்து தந்தைக்கு பெருமை சேர்க்கின்றன.