அந்த ஒரு காட்சி!. கமலை ரஜினி ஓவர் டேக் செய்வார்.. அன்றே கணித்த இயக்குனர் ஸ்ரீதர்..
கமல் சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வரும் நடிகர். பாலச்சந்தரால் வார்த்து எடுக்கப்பட்டவர். நடிப்பின் பரிமாணங்களை அவருக்கு சிவாஜி, நாகேஷ் என பல குருநாதர்கள் சொல்லி கொடுத்துள்ளனர். எனவே, அதையெல்லாம் கற்றுக்கொண்டு சினிமாவில் வளர்ந்தவர் கமல். ஆனால், ரஜினி அப்படி அல்ல. நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்து ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து பாலச்சந்தரால் அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமானவர்.
முதல் படமே கமலுடன் நடித்ததால் தொடர்ந்து அவருடன் பல படங்களிலும் அவரின் நண்பனாகவே ரஜினி நடித்தார். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதையே விரும்பினர். ஹீரோவின் சம்பளத்தை இரண்டாக பிரித்து இருவருக்கும் தயாரிப்பாளர் கொடுத்தார். ஒருகட்டத்தில் கமல் ரஜினியிடம் அதை விளக்கி ‘நாம் இனிமேல் சேர்ந்த படம் செய்ய வேண்டாம். இருவரும் தனித்தனியாக நடிப்போம்’ என சொல்ல ரஜினியும் அதையே பின்பற்றினார்.
ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடித்து 1978ம் வருடம் வெளியான திரைப்படம் இளமை ஊஞ்சலாடுகிறது. இப்படத்தில் ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்தில் ரஜினியின் நடிப்பை பார்த்த ஸ்ரீதர் 'இந்த பையன் பின்னாடி பெரிய ஆளா வருவான்’ என சொல்ல, அங்கிருந்தவர்கள் ‘கமல் எவ்வளவு சிவப்பாக இருக்கிறார். நடனமாடுகிறார்,.. அவரை விட்டுவிட்டு கருப்பாக இருக்கும் இவரை போய் சொல்றீங்களே’ என சொல்ல ஸ்ரீதரே மீண்டும் ‘நான் நூறு ரூபாய் பெட் கட்டுகிறேன்.. இன்னும் 5 வருடத்தில் பாருங்கள். ரஜினி கமலை ஓவர்டேக் பண்ணுவார்’ என சொன்னாராம்.
ஸ்ரீதர் சொன்னது போலவே கமலை ரஜினி ஓவர்டேக் செய்ததை திரையுலகம் கண்கூடாக பார்த்தது குறிப்பிடத்தக்கது.