சட்டி சுட்டதா..கை விட்டதடா பாடல் உருவானதன் பின்னணி!.. கண்ணதாசன் பலே கில்லாடி!…

by சிவா |   ( Updated:2023-04-12 08:54:02  )
kannadasan
X

kannadasan

பாடல் வரிகளோடு மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு ரசிகர் கூட்டம் கிராமப்புறங்களில் எப்போதும் உண்டு. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கண்ணதாசன் என சொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள். மகிழ்ச்சி, சோகம், துக்கம், ஏமாற்றம், தோல்வி, விரக்தி, காதல், பக்தி, தத்துவம், நம்பிக்கை என திரைப்படங்களில் காட்சிபடுத்தப்பட்ட பல காட்சிகளுக்கும் தனது பாடல் வரிகள் மூலம் உயிர் கொடுத்தவர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு பல பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். குறிப்பாக சிவாஜி படங்களில் இடம் பெற்ற பல சோகமான பாடல்களுக்கும், தத்துவ பாடல்களுக்கும் வரிகள் எழுதியது கண்ணதாசன்தான். அது போன்ற பாட்டுகள் மட்டுமே பல நூறு உண்டு. அதில் ஒரு பாடல்தான் ஆலயமணி படத்தில் இடம் பெற்ற சட்டி சுட்டதடா கை விட்டதடா என்கிற பாடல். தவறு செய்த மனிதன் ஞானம் வந்து பாடுவது போல அப்பாடலின் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை இயக்கியவர் கே.சங்கர். இப்பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இந்த படம் உருவான போது கவிஞர் கண்ணதாசன் அரசியலில் நுழைந்திருந்தார். எனவே, சில பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து அவர் பேசி வந்தார். எனவே, அந்த காட்சிக்கான பாடலை அவர் எழுதுவது தள்ளிக்கொண்டே சென்றது. இந்த பாடலை எழுவது தொடர்பாக பட நிறுவனத்தில் பணிபுரிந்த ராமு என்பவர் கண்ணதாசனிடம் தொடர்ந்து பேசி வந்தார். ஒருநாள் ‘ராமு இன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேச வேண்டியுள்ளது. கண்டிப்பாக இன்றைக்கு அந்த பாடலை எழுதி கொடுத்து விடுகிறேன்’ என கண்ணதாசன் சொல்ல விரத்தி அடைந்த ராமு ‘அட என்ன கவிஞரே!.. சட்டி சுட்டது கைவிட்டதுன்னு உடனே எழுதி கொடுக்க வேண்டியதுதானே’ என சொல்ல கண்ணதாசன் ‘அட இதையே பல்லவியா வச்சி எழுதிடலாம்’ என சொல்ல அப்படி உருவான பாடல்தான் ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ ஆகும். இந்த பாடலில் கண்ணதாசனின் முழு ஆளுமையும் வெளிப்பட்டிருக்கும்.

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா

என கண்ணதாசன் விளையாடியிருப்பார். காலத்தால் அழியாத தத்துவ பாடலாக இந்த பாடல் அமைந்தது. இப்போதும் பல மரணங்களின் இறுதி நிகழ்வில் இந்த பாடல் ஒலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story