நான்தான் பூதங்களின் பூதம்... ஜீபூம்பா!.. 60களில் தெறிக்கவிட்ட மாயாஜாலப்படம்!..

1967 ம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது. எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா சுட, அதனால் கொந்தளித்த ரசிகர்கள் எம்.ஆர்.ராதாவின் வீட்டை அடித்து நொறுக்க என பரபரப்பாக இருந்தது. அந்த நேரத்தில் ரசிகர்களைக் கொஞ்சம் குதூகலப்படுத்த வந்த படம் தான் பட்டணத்தில் பூதம்.

நான் தான் பூதங்களின் பூதம்... ஜீபூம்பா என்று ஜாவர் சீதாராமன் பேசும் வசனம் இப்போது பார்த்தாலும் நமக்குள் ஒரு குழந்தைக்கான ரசனையை உண்டுபண்ணி விடும். இந்தப் படத்தைத் தயாரித்தது வீனஸ் நிறுவனம். அதுவரை கதை, வசனத்தை எழுதி வந்த ஸ்ரீதரை இயக்குனராக உருவாக்கியது வீனஸ் பிக்சர்ஸ் தான். இதன் முதலாளிகளில் ஒருவர் தான் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. இவர் மணிரத்னத்தின் சித்தப்பா.

அவருக்கு ஒரு கொள்கை உண்டு. தரமான படங்களைத் தயாரிக்க வேண்டும். ஆனால் ரசிகர்களைக் கவரும் அம்சங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அதைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ஜாவர் எழுதிய கதை தான் பட்டணத்தில் பூதம். எழுதியதோடு மட்டுமல்லாமல் பூதமாகவும் நடித்து அசத்தினார். இவர் திருச்சியைச் சேர்ந்தவர். பிராஸ் பாட்டில் என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல் தான் பட்டணத்தில் பூதம்.

PB

PB

காதலர்களை சேர்த்து வைப்பது, கார்களை வானில் பறக்க விடுவது, ஹெலிகாப்டர் சேசிங் என படம் அப்போதே ஹாலிவுட்டுக்கு சவால் விட்டது. ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, கே.பாலாஜி, வி.கே.ராமசாமி, நாகேஷ், விஎஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் பூதம் நம்மை பயம் காட்டாது. ரசிக்க வைக்கும். நல்ல தமிழ் பேசும். அதோட டிரஸ் சூப்பரா இருக்கும். அதனால் ரசிகர்கள் பூதம் வரும் காட்சிகளை ரொம்பவே ரசித்தனர்.

ஆர்.எஸ்.மனோகர், ஜோதிலட்சுமி, விஜயலலிதா ஆகியோரது நடிப்பும் படத்தில் அட்டகாசமாக இருந்தது. படத்தை வி.வி.ராமன் இயக்கினார். ஒளிப்பதிவாளர் எச்.ஜி.ராஜா. கிராபிக்ஸ்சே இல்லாத அந்தக்காலத்திலேயே பல தந்திரக்காட்சிகளைப் புகுத்தி அசத்திவிட்டார். படத்திற்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உதவியாளர் கோவர்த்தனம். கண்ணதாசனின் வைர வரிகளில் உலகத்தில் சிறந்தது எது? அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா என்ற 3 பாடல்களும் முத்தானவை.

 

Related Articles

Next Story